Bengaluru Stampede: கொலைக்களமான கொண்டாட்டம், பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான ஒரே காரணம் - நடந்தது என்ன?
Bengaluru Stampede Reasons: பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Bengaluru Stampede Reasons: பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை காண வந்தவர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்ட நெரிசல் - 11 பேர் பலி
பெங்களூரு அணியின் மறக்கமுடியாத வெற்றிக் கொண்டாட்டமாக இருக்க வேண்டிய நிகழ்வானது, கட்டுக்கடங்காத கூட்டம், முறையாக நிர்வகிக்காத அதிகாரிகள், காவல்துறையினர் நடத்திய தடியடி ஆகிய காரணங்களால் நெஞ்சை உலுக்கும் சோக சம்பவமாக மாறியுள்ளது. 18 ஆண்டுகால காத்திருப்பிற்குப் பின் தங்களது அணி கோப்பையை வென்றதை கொண்டாட வந்த ரசிகர்களில், 11 பேர் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மோசமான நாளாக மாறி இருக்கிறது.
குழப்பம் ஏற்பட்டது எங்கே?
சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், 33 பேர் காயமடைந்தனர். பலியானவர்களுன் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த மைதானத்தின் மொத்த திறன் அதிகபட்சமாக 35 ஆயிரம் பேராக மட்டுமே இருக்க, ஒரே நேரத்தில் 2 முதல் 3 லட்சம் பேர் கூடியதால் இந்த மோசமான நிலை ஏற்பட்டதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மைதான வளாகத்தில் குவிந்த கூட்டம்
அதிகப்படியான ரசிகர்கள் கூடினால் அவர்களை கையாள எந்தவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளாத நிலையில், விராட் கோலி போன்ற கிரிக்கெட் நட்சத்திரங்களை காண அலைகடலென மைதான வளாகத்தில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். அவசரகதியில் ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியின் டிக்கெட்டுகள் நொடியில் விற்று தீர்ந்தன. ஆனால், ரசிகர்கள் 12, 13 (பிரதான வாயில்கள்) மற்றும் 10 (கிளப் ஹவுஸ் நுழைவாயில்) ஆகிய அனைத்து வாயில்களிலும் ஒரே அடியாக குவிந்ததால், அவர்களைக் கட்டுப்படுத்த போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் டிக்கெட் இல்லாதவர்கள் உள்ளே நுழைவதை கட்டுப்படுத்த, காவல்துறை மற்றும் மைதான பாதுகாப்பு அதிகாரிகள் அனைர்த்து வாயில்களையும் மூடியுள்ளனர்.
காவல்துறை தடியடி
நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முறைப்படி டிக்கெட் வாங்கி வந்தவர்கள் தங்களை உள்ளே அனுமதிக்க காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். அதேநேரம், மற்றவர்களும் உள்ளே நுழைய முயன்றதால், கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. இதனால் காவல்துறை லேசான தடியடியை முன்னெடுத்துள்ளது. சில நுழைவு வாயில்களில் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை கண்டதும் அச்சம் கொண்ட சிலர், நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை உயிர் தான் முக்கியம் என அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
மயங்கி விழுந்த மக்கள்
பெண்கள் மயக்கமடைந்து விழுந்தது, சிலர் ரசிகர்களின் தள்ளுமுள்ளால் நசுங்கப்படுவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. மூச்சு திணறியும், கூட்ட நெரிசலில் உடல் நசுங்கியும் தள்ளாடி கீழே விழுந்தனர். ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம், மாலை 6.30 மணியளவில் நிறைவுற்றது. இந்த நேரத்திலேயே மறக்க முடியாத சோக நிகழ்வாக 11 உயிர்கள் பறிபோகிவிட்டன.





















