Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
முதன்முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்காக நடந்த பாராட்டு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் ஆடும் அணிகளில் அதிகளவு ரசிகர்களை கொண்ட ஒரு அணி ஆர்சிபி. சமூக வலைதளங்களிலே சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ரசிகர்களை காட்டிலும் ஆர்சிபி அணியின் ரசிகர்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்படும்.
11 பேர் உயிரிழப்பு:
இந்த நிலையில், ஆர்சிபி அணி முதன்முறையாக ஐபிஎல் மகுடத்தை கடந்த 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக நேற்று கைப்பற்றியது. இந்த நிலையில், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்கள் ஆர்சிபி வீரர்களை காண்பதற்காக கட்டுக்கடங்காமல் குவிந்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரும் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

சோகத்திலும் நடந்த பாராட்டு விழா:
இந்த சோகம் அரங்கேறிய நிலையிலும் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. விராட் கோலி, ரஜத் படிதார், பில் சால்ட், டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, ஜிதேஷ் சர்மா என ஆர்சிபி அணியில் ஆடிய அனைவரும் இந்த பாராட்டுக்கு தகுதி பெற்றவர்கள் என்றாலும் இந்த துயர சம்பவம் ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் சென்ட்ரல் காலேஜ், கப்பன் பார்க், விதான் செளதா ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. ஆர்சிபி நேற்று இரவு வெற்றி பெற்றதை நாடே கொண்டாடிய நிலையில், அந்த மகிழ்ச்சி முழுமையாக ஒருநாள் கூட நிறைவேறாத நிலைக்கு ஆர்சிபி வீரர்களுக்கான பாராட்டு விழா மாறிவிட்டது.
கவலையில் ஆர்சிபி ரசிகர்கள்:
இந்த சம்பவம் ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. காலத்திற்கும் நீடிக்கும் வகையில் படிந்துள்ள இந்த கறையை கர்நாடக அரசு எப்படி சரி செய்யப்போகிறது? என்பது மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது. மேலும், ஆர்சிபி ரசிகர்களும் இந்த துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க உதவியையும், நிவாரணத்தையும் அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.




















