Bengaluru Stampede: ”இந்த விழா பற்றி எங்களுக்கே தெரியாது” குண்டை தூக்கிப்போட்ட ஐபிஎல் தலைவர்
Bengaluru Stampede: இந்நிகழ்வு குறித்து பிசிசிஐக்கு எந்த முன் தகவலும் இல்லை,சம்பவம் குறித்து அறிய நான் அங்கு சென்றபோது, உள்ளே இருந்த யாருக்கும் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்றார் துமல்

பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை காண வந்தவர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து ஐபிஎல் நிர்வாகத்திற்கு தகவல் வரவில்லை கமிட்டி தலைவரான அருண் துமல் தெரிவித்துள்ளார்.
சின்னச்சாமி கூட்டநெரிசல்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) முதல் ஐபிஎல் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் போது, மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமல் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். மைதானத்தில் கொண்டாட்டங்கள் குறித்து பிசிசிஐக்கு எந்த முன் தகவலும் இல்லை என்று அவர் கூறினார். இந்த துயர சம்பவம் துரதிர்ஷ்டவசமானது மற்றும் மனவேதனை அளிக்கிறது என்று அவர் கூறினார்.
துரதிர்ஷ்டவசமான சம்பவம்
இந்த துயர சம்பவம் குறித்து "இது மிகவும் சோகமான மற்றும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். முதலில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வு குறித்து பிசிசிஐக்கு எந்த முன் தகவலும் இல்லை. இந்த சம்பவம் குறித்து அறிய நான் அங்கு சென்றபோது, உள்ளே இருந்த யாருக்கும் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, ஏனெனில் அங்கு ஒரு பெரிய கூட்டம் இருந்தது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க ஆர்சிபி வீரர்கள் விதான சவுதாவை அடைந்த சிறிது நேரத்திலேயே, மைதானத்தின் கேட் எண் 2 க்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வெற்றி அணிவகுப்பு உண்மையில் நடக்குமா இல்லையா என்ற குழப்பத்திற்கு மத்தியில், மைதானத்திற்கு வெளியே கூட்டம் மணிக்கணக்கில் கூடிக்கொண்டே இருந்தது."
ஊர்வலம் ரத்து:
கூட்டம் அதிகமானதை அடுத்து போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்ப்படலாம் என்பதை காரணம் காட்டி பெங்களூரு போக்குவரத்து போலீசார் ஊர்வலத்தை அனுமதிக்க மறுத்துவிட்டனர், ஆனால் அணியின் முதல் ஐபிஎல் வெற்றியைக் கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே கூடியிருந்தனர்.
கொண்டாட்ட நாளாக இருக்க வேண்டிய நாள் துக்க அலையாக மாறியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிசிசிஐ சார்பாக எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொண்டாட வந்த மக்கள் இதுபோன்ற துயரச் சம்பவத்தில் பலியானது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. பிசிசிஐயைப் பொறுத்தவரை, ஐபிஎல் நேற்று முடிவடைந்தது. தேவையான அனைத்து நெறிமுறைகளும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்டன.
KSCA இரங்கல்:
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த கவலை மற்றும் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. "இன்று காலை எம். சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஏற்பாடு செய்திருந்த விழாவின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து RCB-KSCA தனது ஆழ்ந்த கவலை மற்றும் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு மற்றும் காயங்களால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. இந்த துயரத்திற்கு நாங்கள் மனதார வருந்துகிறோம், இந்த மிகவும் கடினமான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுடன் நிற்கிறோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இழப்பீடு அறிவிப்பு:
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் KSCA ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. கர்நாடக மாநில அரசும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.





















