சாதி அடையாளம்! பள்ளிகளில் கூடவே கூடாது.. பதற்றத்தில் நெல்லை.. பறந்தது ஆர்டர்
ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச் செல்வதைத் தடுக்க பள்ளி நுழைவாயில்களில் மாணவர்களின் பைகளை தினமும் சரிபார்க்க வேண்டும் என நெல்லை பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளாடை பனியன், கையில் கயிறு என மாணவர்கள் எதனையும் உடுத்தக் கூடாது என பள்ளிகளுக்கு நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி எம். சிவகுமார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பள்ளிகளில் அதிகரிக்கும் சாதி மோதல்கள்:
தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி பள்ளிகளில் சாதி மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வெவ்வேறு சாதி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், ஒருவருக்கொருவர் தாக்கி கொள்வது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு, நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த தலித் மாணவர் மற்றும் அவரது சகோதரி மீது ஆதிக்க சாதியை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, கடந்த 2024ஆம் ஆண்டு, ஜூலை மாதம், மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதற்கு அடுத்த மாதமே, ஆகஸ்டில் வள்ளியூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இரண்டு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டனர்.
பதற்றத்தில் நெல்லை:
பள்ளிகளில் சாதி மோதல்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து அதை களைவதற்காக முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. பள்ளிகளின் பெயரில் உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும், ஆதிக்க சாதியினர் அதிகம் உள்ள பள்ளிகளில் அதே சமுதாயத்தை சேர்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்யக் கூடாது, மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆடைகளை அணிய தடை விதிக்க வேண்டும் உள்பட பல பரிந்துரைகளை ஆணையம் வழங்கியது.
இந்த நிலையில், எந்த சாதியை சேர்ந்தவர் என்பதை வெளிப்படுத்தும் விதமான உள்ளாடை பனியன், கையில் அணியப்படும் கயிறு ஆகியவற்றுக்கு பள்ளிகளில் தடை விதித்து நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி எம். சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். அதோடு, சைக்கிள்களில் சாதி தொடர்பான ஸ்டிக்கர்களை ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பறந்தது ஆர்டர்:
ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச் செல்வதைத் தடுக்க பள்ளி நுழைவாயில்களில் மாணவர்களின் பைகளை தினமும் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களிடையே மோதல்களைத் தடுக்க, தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மோதலுக்கான அறிகுறிகளை முன்கூட்டியே அடையாளம் காணவும், உடனடியாக தலையிடவும் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "அனைத்து மாணவர்களும் அரசு பரிந்துரைத்த சீருடைகளை மட்டுமே அணிய வேண்டும். சிறுவர்கள் இறுக்கமான அல்லது குட்டையான பேன்ட்களை அணியக்கூடாது. அரைக்கை சட்டைகளை தேர்வு செய்ய வேண்டும். விதிகளின்படி ஹேர்கட் பின்பற்றப்பட வேண்டும்.
மேலும், மாணவிகள், தங்கள் தலைமுடியை இரண்டு ஜடைகளில் பின்ன வேண்டும். ஓவர் கோட் அணிய வேண்டும். பள்ளிகள் மாணவர்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் மற்றும் கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்துவது குறித்தும், கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறகும், உணவுக்கு முன்பும் கைகளைக் கழுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.
காலை பிரார்த்தனையின்போது, தூய்மையை பேணுவது தொடர்பாக மாணவர்கள் கட்டளைகளை வாசிக்க வேண்டும். அதன் செயல்பாட்டைச் சரிபார்க்க ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.





















