Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
கோயிலில் கண்ணீர் விட்டு அழுததாகவும், கடவுளையே திட்டியதாகவும் பாடகி சின்மயி மனம் விட்டு பேட்டி அளித்துள்ளார்.

பிரபல பாடகி சின்மயி தனக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தும், சமீபத்தில் தக்ஃலைப் படத்தில் பாடியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
டப்பிங் யூனியன் கணக்கு தப்பு:
"டப்பிங் யூனியனில் எல்லாரும் 10 சதவீதம் கண்டிப்பாக கொடுத்தே தீர வேண்டும். அது ஏன் என்று தெரியவில்லை. எங்களின் பணிகளை இவர்கள் நிர்வகிப்பதால் எடுக்கிறார்கள் என்று கிடையாது. அவர்களே ஒரு விதி உருவாக்கி 10 சதவீதம் என்று எடுக்கிறார்கள். இதை எல்லாம் கணக்கு கேட்டால் வரம்புக்கு மீறி செலவு இருக்கும். அவங்களே அரசுக்கு சமர்ப்பிக்கும் கணக்குதான் அது. எல்லாம் தப்புதப்பாதான் இருக்கும்.

ரஜினி, அஜித், விஜய், கமல் அவங்க நான்கு பேரோட சம்பளத்துல இருந்தே சங்கம் வாங்கியிருந்தா நித்தியானந்தா நடத்தும் கைலாஷா மாதிரி இங்கு ஒன்னு பண்ணிக்கலாம். நான் நகைச்சுவைக்காக சொல்லவில்லை. அவரவர் விருப்பத்திற்கு நடத்துகிறார்கள். டப்பிங் யூனியன் நலிந்த கலைஞர்களுக்கு செலவு செய்வதாக சொல்கிறார்கள். நான் பார்க்கவில்லை.
கோயிலில் நின்று அழுதேன்:
எனக்கு உண்மையை சொன்னதுக்காக இது நடந்துவிட்டதே என்ற மன வருத்தம் இல்லாமல் இல்லை. ஆனால், இது சொன்னால் இது நடக்கும் என்று எனக்குத் தெரியும். என் மனது வருத்தம், வேதனை இருக்கும். இந்த 6, 7 வருடத்தில் சின்மயி பத்தி பேசவே வேண்டாம் என்ற சூழலில் என்னுடனே நின்றார்கள். இந்த புகழ்ச்சி, பாராட்டு, தொல்லை எல்லாம் வந்து வந்து போகும். இது எல்லாம் எனக்கு மறத்து போகிடுச்சு. இனி என்ன வந்தாலும் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறேன்.
நான் சும்மா ஒரு பாட்டுதானே பாடினேன். எனக்கே இது ஒரு பிரச்சினை ஆகிடுமோ என்ற பதற்றம் ஆகிவிட்டது. பாராட்டை கூட முடியாத நிலையில் இருந்தேன். ஏராளமான கோயிலில் நின்று அழுதேன். கோயிலில் கர்ப்பகிரகம் மத்தியில் அழுதுவிட்டு, வெளியில் நான் தைரியமான பெண் என்று சுற்றித் திரிவேன். என் கூடவே நான்கு பேர் இருந்தாங்க அவங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது.
கடவுளை திட்டுவேன்:

வீடு வாடகையில இருந்தேன். வீட்டு வாசலில் யார், யாரோ என்னன்னவோ சொன்னார்கள். அவர்களின் உறவினர்களே சொன்னார்கள். ஏன் இவளை எல்லாம் வாடகைக்கு வைத்துள்ளனர். காலி பண்ணுனு சொல்லுவாங்க. அவங்க அதெல்லாம் கிடையாது. நாங்க சின்மயிக்காக பெருமைப்பட்றோம்னு சொன்னாங்க. நான் அதெல்லாம் யோசிக்காம பேசுனேன்.
ஏய் நீயெல்லாம் கடவுளா நீ? கடவுள் இருக்கியா? இல்லையா?னு எல்லாம் திட்டுவேன். இருந்தா நல்லா இருக்கும்னு எல்லாம் சொல்றாங்களே. ஆனா நீ இருக்குற மாதிரி எல்லாம் தெரியலயேனு சொல்லுவேன். 20 வயசுல வீட்ல இருக்குற சாமி படத்தை எல்லாம் ரோட்ல வீசிருக்கேன். அம்மாகூடதான் சண்டையும் போடுவோம். அம்மாகிட்டதான் அழவும் செய்வோம் அப்படிங்குற மாதிரிதான்.
பாடியது எப்படி?
2018ல் அக்டோபரில் என்னை தடை விதிக்குறாங்க. 2019ல் சர்வம் தாளமயம் ரிலீஸ் ஆகுது. சர்வம் தாளமயம் 4 வருடத்திற்கு முன்பே நடந்த திரைப்படம். நா.முத்துக்குமார் உயிருடன் இருந்தபோது நான் பாடுன பாட்டு. நிறைய பாட்டு அப்போ ரிலீஸ் ஆகுது. கோவிட்ல நிறைய படம் ரிலீஸ் ஆகல. அப்புறம் ரிலீஸ் ஆகுது. எல்லாம் சேத்து வச்சு அதுக்கு அப்புறம் ரிலீஸ் ஆகுது.
இளைய இசையமைப்பாளர்கள் எங்கே எல்லாம் ஆதரவு தர முடிந்ததோ அங்கெல்லாம் கேட்டு பார்த்தார்கள். ஆனால், தயாரிப்பாளர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டனர். மாசம் 20 பாட்டு பாட்றதுக்கும், 6 வருஷத்துக்கு 20 பாட்டு பாட்றதுக்கும் வித்தியாசம் இருக்குது. அதுவும் முட்டி மோதி வரும். மீதி எல்லாம் டப்பிங் படமா இருக்கும். நல்லவேளை ராதாரவியையும், வைரமுத்துவையும் அதுக்கு அப்புறம் பாக்கல. நல்லவேளை அவங்களுக்கு பாக்கல.
இவ்வாறு அவர் பேசினார்.





















