TVK Vijay: அரசியல் கட்சிகள் பொய் பிரச்சாரம்.. நல்ல தலைவர்களை தேர்வு செய்ய விஜய் அறிவுறுத்தல்!
ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் உண்மைத் தன்மையை தெரிந்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் உண்மைத் தன்மையை தெரிந்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்.
நடிகர் விஜய் தொடர்ந்து 2வது ஆண்டாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த சட்டமன்ற தொகுதி வாரியாக மாணவ,மாணவியர்களை கௌரவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் தளபதி விஜய் கல்வி விருதுகள் வழங்கும் விழா என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று அனைத்து மாணவ, மாணவியரையும் கௌரவித்தார். மேலும் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவ,மாணவியர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரம் வழங்கி சிறப்பித்தார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கான நிகழ்ச்சி ஜூலை 3 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சால்வை அணிவித்து ஊக்கத்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கினர் விஜய்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய், மாணவர்களின் எதிர்கால தேர்வு, செய்திகளின் உண்மைத்தன்மையை சரிபார்த்தல், போதைப்பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்தல் ஆகிய 3 முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். அதாவது, இன்றைய காலக்கட்டத்தில் ஊடகத்தினருக்கு நிகராக சமூக வலைத்தள சேனல்கள் பெருகி விட்டது. இவர்கள் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும், தனிப்பட்ட நபர்கள் பற்றியும் பேசுகிறார். இதில் எது உண்மை, பொய் என்பதை தெரிந்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையிலே இந்த நாட்டுல என்ன பிரச்சினை, சமூக தீமைகள் பற்றி தெரிய வரும்.
அதை தெரிந்தாலே ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான பிரச்சாரங்களை நம்பாமல், எது உண்மை, பொய் என தெரிந்துக்கொண்டு நல்ல தலைவர்களை தேர்வு செய்யக்கூடிய விசாலமான உலகப்பார்வையை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும்.அது வந்துவிட்டால் அதைவிட சிறந்த அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது. அதைக்காட்டிலும் நம்ம நாட்டுக்கு நீங்கள் செய்யக்கூடிய சிறந்த பங்களிப்பு வேறு எதுவும் இல்லை” என பேசினார்.