MG M9 Electric MPV: பெருசா, சொகுசா.. இதென்னா சீட்டா? பெட்டா? 7 சீட்டர் EV, வண்டி ஓடாது மிதக்கும் போலியே..
MG M9 Electric MPV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் MG நிறுவனத்தின் ப்ரீமியம் மின்சார மல்டி பர்பஸ் வாகனமான M9 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

MG M9 Electric MPV: MG நிறுவனத்தின் ப்ரீமியம் மின்சார மல்டி பர்பஸ் வாகனமான M9-யின் விலை 69 லட்சத்து 90 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
MG M9 எலெக்ட்ரிக் MPV அறிமுகம்:
சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் MG மோட்டார் நிறுவனத்தால் மேக்சஸ் மிஃபா என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் ப்ரீமியம் 7 சீட்டர் எம்பிவி ஆனது, உள்நாட்டு சந்தையில் MG M9 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரானது குறிப்பாக MG செலக்ட் ப்ரீமியம் டீலர்ஷிப் தளங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. உள்நாட்டில் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் முதன்மையான கார் மாடலாக நிறுத்தப்பட்டுள்ளது. 69 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த காரின் விநியோகம், வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது விற்பனை நிலையங்களை நேரடியாக அணுகி, ஒரு லட்சம் ரூபாயை முன்பணமாக செலுத்தி காரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
MG M9 எலெக்ட்ரிக் MPV - பேட்டரி விவரங்கள்:
MG M9 ப்ரீமியம் காரில் 90KWh NMC பேட்டரியானது ஒற்றை மின்சார மோட்டாருடன் சேர்ந்து, அதிகபட்சமாக 245hp மற்றும் 350Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 548 கிலோ மீட்டர் தூரம் இடைநிற்றலின்றி பயணிக்கு ரேஞ்ச் கிடைக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் நார்மல், எகோ மற்றும் ஸ்போர்டி என மூன்று வகையான மோட்கள் இடம்பெற்றுள்ளன. வீட்டின் சுவற்றில் பொருத்தக்கூடியதாக 11KW சார்ஜரையும், கையில் எடுத்தச் செல்லக்கூடியதாக 3.3KW போர்டபள் சார்ஜரையும் MG நிறுவனம் வெஹைகிள் பேக்கேஜாக வழங்குகிறது.
MG M9 எலெக்ட்ரிக் MPV - வெளிப்புற அம்சங்கள்
சொகுசு மற்றும் வசதியான பயணங்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களை இலக்காக கொண்டு இந்த கார் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உயர்தரமிக்க உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரில் இணைக்கப்பட்டுள்ளன. MG M9 காரானது 5 ஆயிரத்து 270 மில்லி மீட்டர் நீளம் கொண்டு, உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் நீளமான கார்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதுபோக 3 ஆயிரத்து 200 மில்லி மீட்டர் வீல்பேஸ், 2 ஆயிரம் மில்லி மீட்டர் அகலம் மற்றும் ஆயிரத்து 840 மில்லி மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கனெக்டட் எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் டெயில் லேம்ப்கள், 19 இன்ச் அலாய் வீல்கள் என பிரீமியம் தோற்றத்திற்கான பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் சிங்கிள் பேன் சன் ரூஃபும், பின்புறத்தில் பனோரமிக் சன்ரூஃபும் இடம்பெற்றுள்ளது. கிரே, பியர்ல் லஸ்டர் ஒயிட் மற்றும் மெடல் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு MG Motor நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம்
MG M9 எலெக்ட்ரிக் MPV - உட்புற அம்சங்கள்
அதன்படி, பின்புறம் அமரும் பயணிகளுக்காக 16-வே கண்ட்ரோல்கள், வெண்டிலேடர் மற்றும் ஹீடட் ஆப்ஷன்கள் மற்றும் எட்டு தனித்துவமான மசாஜ் அமைப்புகளுடன் முழுமையாக சரிசெய்யக்கூடிய ஒரு ஜோடி ப்ரெசிடென்ஷியல் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. 7 பேர் அமரும் வகையிலான இடவசதியுடன் 12.23 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டச் ஸ்க்ரீன், 7 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, டூ ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் ஃப்ளோட்டிங் செண்ட்ரல் கன்சோல் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. பவர்ட் போஸ் மோட், டிஜிட்டல் IRVM, கேபின் ஏர் ஃபில்டர், 13 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பின்புறத்திலும் எண்டர்டெயின்மெண்ட் டச்ஸ்க்ரீன்ஸ்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிலே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 945 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது.
MG M9 எலெக்ட்ரிக் MPV - பாதுகாப்பு அம்சங்கள்
ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு பரிசோதனைகளில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, 7 ஏர் பேக்குகள், லெவல் 2 ADAS, முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, டயர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் என உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பல தரமான அம்சங்களையும் பெற்றுள்ளது.
MG M9 எலெக்ட்ரிக் MPV - சலுகைகள், போட்டியாளர்கள்
இந்த காரை முதல் நபராக முன்பதிவு செய்பவருக்கு பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்திற்கு 3 வருடம் அல்லது எல்லையில்லா கிலோ மீட்டர் வாரண்டியும் வழங்கப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் இந்த காரானது நான்காவது தலைமுறை கியா கார்னிவெல் மற்றும் டொயோட்டா வெல்ஃபையரிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.





















