VP Jagdeep Resign: வேலையை காட்டிய பாஜக? முதல்முறை ”யாருக்கோ பிடிக்கல” ஜெகதீப் தன்கர் ராஜினாமா பின்புலம்
VP Jagdeep Resign: குடியரசு துணை தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் விலகியதற்கு அரசியல் அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

VP Jagdeep Resign: ஜெகதீப் தன்கரின் செயல்பாடு பாஜகவிற்கு பிடிக்காததால் அவர் பதவி விலக வற்புறுத்தப்பட்டு இருக்கலாம் என, காங்கிரச் உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ராஜினாமாவால் எழும் கேள்விகள்:
உடல்நல பிரச்னை காரணமாக தான் வகித்து வரும் குடியரசு துணை தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவாதாக நேற்று மாலை ஜெகதீப் தன்கர் அறிவித்தார். பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய இந்த முடிவு வெளியானதுமே, மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் ராஜினாமா செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன. அதன்படி,
சொந்த கருத்துக்கே முரண்பாடு
அண்மையில் கடந்த 10ம் தேதி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெகதீப் தன்கர், “ தெய்வீக தலையீட்டிற்கு உட்பட்டு நான் சரியான நேரத்தில், ஆகஸ்ட் 2027 இல் ஓய்வு பெறுவேன்” என குறிப்பிட்டு இருந்தார். அதாவது அந்த ஆண்டு தான் அவரது பதவிக்காலம் முடியவிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததில், “நமது கண்களுக்கு புலப்படுவதை காட்டிலும் பல முக்கிய காரணங்கள் இதில் இருக்கிறது” என எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
”நல்லா பேசிட்டு இருந்தாரே”
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரின் திடீர் ராஜினாமா விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இன்று மாலை சுமார் 5 மணி வரை நான் அவருடன் பல எம்.பி.க்களுடன் இருந்தேன், இரவு 7:30 மணிக்கு தொலைபேசியில் அவருடன் பேசினேன். சந்தேகத்திற்கு இடமின்றி தங்கர் தனது உடல்நிலைக்கு மிக உயர்ந்த முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால் அவரது முற்றிலும் எதிர்பாராத ராஜினாமாவில் கண்ணுக்குத் தெரிவதை விட மிக அதிகமான விஷயங்கள் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
”பாஜகவிற்கு பிடிக்கவில்லை”
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் தலைவர் உமாங் சிங்கர், "ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவிற்கு பின்னால் பாஜகவின் அரசியல் அழுத்தம் இருப்பதாக நான் நம்புகிறேன். அவரது உடல்நிலை உண்மையில் ஆபத்தில் இருந்ததா? முன்னதாக இன்று வேளாண் அமைச்சகம் குறித்து தன்கர் கருத்து தெரிவித்த விதம், ஒருவேளை பாஜகவுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்” என குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் எம்.பி., நீரஜ் தங்கி பேசுகையில், “ஒருவேளை அரசாங்கம் இந்த முடிவை அவர் மீது திணித்திருக்கலாம். இது நாட்டிற்கோ அல்லது நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கோ சரியானதல்ல. இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு குடியரசு துணை தலைவர் தானாக ராஜினாமா செய்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். எந்தப் பதவியாக இருந்தாலும், அரசாங்கம் இந்த நாட்டை தன்னிச்சையாக நடத்த விரும்புகிறது” என சாடியுள்ளார்.
இதுபோக,”தன்கரின் ராஜினாமா பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல்களை அம்பலப்படுத்தியுள்ளது. சுயநலமின்மை காரணமின்றி இல்லை. ஏதோ ஒன்று மறைக்கப்படுகிறது” என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.





















