Annamalai Yatra: தென்னாப்ரிக்காவிற்கு பறக்கும் அண்ணாமலை..! மீண்டும் தள்ளிப்போகும் பாதயாத்திரை, அவ்ளோ தானா?
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தென்னாப்ரிக்கா செல்ல உள்ளதால், அவரது பாதயாத்திரை மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தென்னாப்ரிக்கா செல்ல உள்ளதால், அவரது பாதயாத்திரை மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதயாத்திரையை அறிவித்த அண்ணாமலை:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் விதமாக, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் பாதயாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்தார். அதன்படி, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இந்த பயணம் தொடங்கும். 117 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையின் போது, தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தேர்தல் தொகுதியிலும் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு, தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை வலுப்ப படுத்துவது, தேர்தல் நிதி திரட்டுவது உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. இது பாஜகவை தமிழகத்தில் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
கர்நாடகா சென்ற அண்ணாமலை:
ஆனால், கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக இணை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கபட்டார். இதையடுத்து அங்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்ட நிலையிலும், பாஜக தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. இந்த தேர்தல் பணிகளால் தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொள்ள அண்ணாமலை போட்டிருந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
உடனடி லண்டன் பயணம்:
கர்நாடக தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்வார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென லண்டன் பயணம் மேற்கொண்டார். கட்சிப் பணிகள் காரணமாக அவர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. லண்டனில் இருந்து திரும்பியபோது விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், பாதயாத்திரை எப்போது செல்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 9ம் தேதி செல்வேன், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறி குழப்பத்தை ஏற்படுத்தினார்.
அமித் ஷா சொன்ன ஓகே?
இந்த நிலையில் தான், ஜுலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து அண்ணாமலை பாதயாத்திரையை தொடருவார் எனவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் வந்து அதனை தொடங்கி வைப்பார் எனவும் தகவல் வெளியானது. இந்த பயணத்தின் போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் என கூறப்பட்டது. அவருடன் நடைபயணம் மேற்கொள்வதற்காக 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
மீண்டும் தென்னாப்ரிக்கா பயணம்:
இந்த முறை நிச்சயம் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கட்சிப் பணிகளுக்காக விரைவில் தென்னாப்ரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜுலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அண்ணாமலை தனது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த முறையும் குறிப்பிட்ட தேதியில் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்வது தள்ளிப்போக அதிக வாய்ப்புள்ளது.