America Threatens India: ஆள் வைத்து மிரட்டும் ட்ரம்ப்; “இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்“ அமெரிக்க MP அச்சுறுத்தல்
அமெரிக்காவில், ட்ரம்ப் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எம்.பி லிண்ட்சே கிரகாம், பொருளாதாரத்தை அழித்து விடுவோம் என இந்தியாவிற்கு புதிய மிரட்டலை விடுத்துள்ளார். அது எதனால் தெரியுமா.?

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், அது குறித்து பேசும்போது, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு, பொருளாதாரத்தை அழித்து விடுவோம் என ட்ரம்ப் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எம்.பி லிண்ட்சே கிரகாம் மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். ரஷ்யா உடனான வர்த்தகம் தொடர்பாகத்தான் அந்த மிரட்டலை அவர் விடுத்துள்ளார். அது என்ன விவரம் என்பதை தற்போது பார்க்கலாம்.
“ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் பொருளாதாரத்தை அழிப்போம்“
ரஷ்யா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில், சமாதானத்தை விரும்பாத ரஷ்யா, உக்ரைனை தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அது அமலில் இருக்கும் நிலையில், இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன.
இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ட்ரம்ப் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எம்.பி லிண்ட்சே கிரகாம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு, அதிபர் ட்ரம்ப் 100 சதவீதம் வரி விதிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி, உக்ரைன் போர் நீடிக்க அனுமதித்தால், உங்கள் பொருளாதாரத்தை அழித்து விடுவோம்“ என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ட்ரம்ப் கூறிவருவது என்ன.?
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பேசிய ட்ரம்ப், பொருளாதாரத் தடைகள் அமலில் உள்ள நிலையிலும், சீனா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் தான், அந்த வர்த்தகத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து, உக்ரைன் மீதான தாக்குதலை நடத்த ராணுவத்திற்கு ரஷ்யா செலவு செய்து வருவதாக குற்றம்சாட்டி வருகிறார்.
மேலும், ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும், ரஷ்யாவை போன்றே 100 சதவீத வரியை விதிக்க உள்ளதாகவும் ஏற்கனவே கூறியிருந்தார் ட்ரம்ப்.
உக்ரைனுடன் கனிம ஒப்பந்தத்தை மேற்கொண்டுவிட்டதால், அந்நாட்டிற்கு ட்ரம்ப் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். ஆனால், ஒப்பந்தம் போடுவதற்கு முன்னதாக, உக்ரைனையும் மிரட்டியே வந்தார் ட்ரம்ப். அந்நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், கனிம ஒப்பந்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டதால், தற்போது அந்நாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் ட்ரம்ப்.
அதனால் தான், ஜெலன்ஸ்கியின் கோரிக்கையின்படி, ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாகவே, ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் நாடுகளையும் அமெரிக்க தற்போது மிரட்டி வருகிறது.




















