TN Cabinet Meeting: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31-ல் கூடுகிறது அமைச்சரவை கூட்டம்...ஆலோசிக்கப்படும் விஷயங்கள் என்ன?
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31ல் கூடுகிறது அமைச்சரவை கூட்டம்:
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள், புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஆளும் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டு வருகின்றனர். அவ்வப்போது ஆளுநரின் பேச்சுக்கு திமுக பதிலடி கொடுத்தும் வருகிறது. சமீபத்தில் கூட, ”காந்தி மட்டும் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவரை சாதிச்சங்க தலைவராக மாற்றியிருப்பார்கள். திருக்குறள், திருமந்திரம் என அனைத்தையும், சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். இதற்கு திமுகவும் காட்டமாக விமர்சித்தது. இதனை அடுத்து, நேற்று ஆளுநர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தான், அக்டோபர் 31ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது.
ஆலோசிக்கப்படும் விஷயங்கள் என்ன?
இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மாவட்டங்கள் முழுவதும் காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட உள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை இரண்டு மாதங்கள் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை தகுதியானவர்களுக்கு சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்வது குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், தமிழகத்திற்கு வரவுள்ள புதிய தொழில்கள் மற்றும் தொழில் விரிவாக்கம் ஆகியவற்றுக்கான அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.