Anbumani Ramadoss: ‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக, அன்புமணி தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடியாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது என்ன தெரியுமா.?

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனான அன்புமணி ராமதாஸிற்கும் இடையே அதிகாரப் போர் உச்சமடைந்துள்ளது. இன்று, இருவரது தலைமையிலும் வெவ்வேறு கூட்டங்கள் நடந்த நிலையில், தந்தை நடத்திய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என, அன்புமணி நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அன்புமணி தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டம்
இன்று, ராமதாஸ் தலைமையில் பாமக-வின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அதற்கு போட்டியாக, பாமக நிர்வாக குழு கூட்டத்தை நடத்தினார் அன்புமணி ராமதாஸ்.
சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது.
மேலும், அன்புமணிக்கே அதிகாரம் என்ற முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின்படி, கட்சியை வழிநடத்திச் செல்வது, பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் பணியாகும். பாமக-வின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக்குழுவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாசுக்கு மட்டுமே உண்டு என்றும், பாமக-வின் அமைப்பு சட்ட விதி 15-ன் படி, கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, அரசியல் தலைமைக்குழு ஆகியவற்றை பொதுக்குழுவால் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்பதை நினைவு கூர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் பங்கேற்காமல், அரசியல் தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு என்கிற பெயர்களில் நடத்தப்படும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்திற்கும் முரணானது என ஒரு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட அன்புமணியின் தலைமை மீது இக்கூட்டம் நம்பிக்கை தெரிவிக்கிறது எனவும், பாமக-வை தொடர்ந்து வழிநடத்தி செல்வதற்கும், அன்புமணியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நின்று, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்றும் பாமக-வின் அரசியல் தலைமை குழு கூட்டம் உறுதி ஏற்கிறது என்ற தீர்மானமும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராமதாஸ் நடத்திய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
முன்னதாக, இன்று ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் ஓமந்தூரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கூட்டணி குறித்த முடிவை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பொதுவெளியில் ராமதாஸ் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அதனால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தனது செயலுக்கு அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும், கட்சியை பலவீனப்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.





















