TN Cabinet Meeting: வரும் 22-ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் - முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல்?
தமிழ்நாடு அமைச்சரவைக்கூட்டம் வரும் 22-ஆம் தேதி கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது
தமிழ்நாடு அமைச்சரவைக்கூட்டம் வரும் 22-ஆம் தேதி கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறையின் பிடி இறுகி வருகிறது. ஆளுநர்- அரசுக்கு இடையேயான உரசல் போக்கு, நாடாளுமன்ற தேர்தல் என தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்' தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான முன்னெடுப்புகள் குறித்தும் பேசி இருந்தார்.
இந்த சூழ்நிலையில், ஜூலை 22- ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட இருக்கிறது. அதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுப்பது தொடர்பாக ஆலோசிக்கவும், உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது: 2024-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட இந்தியாவையும் அதன் ஜனநாயகத் தன்மையைக் காத்திடவும் பெங்களூரு நகரில் உண்மையான இந்தியா உருவாகியிருக்கிறது. இத்தனை நாள் இந்தியாவின் தேசபக்திக்கு தாங்கள் மட்டுமே ஒட்டுமொத்த குத்தகைதாரர்கள் போல செயல்பட்டு வந்த பா.ஜ.க.வினரும் அதன் பரிவாரத்தினரும், ஜனநாயக இயக்கங்களின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டியதும், அந்தப் பெயரை உச்சரிப்பதற்கே தயக்கம் காட்டியதன் மூலம், அவர்களின் போலி தேசபக்தி முகமூடி கழன்று தொங்குவதைக் காண முடிகிறது.
இந்தியா என்ற சொல் இப்போது அவர்களுக்குப் பிடிக்காத சொல்லாக ஆகிவிட்டது. இந்தியாவைப் பிடிக்காவிட்டால் ‘பாகிஸ்தானுக்குப் போ’ என மதவாத சிந்தனையுடன் பேசிய பா.ஜ.க.வினர் இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்து பா.ஜ.க.வுக்கும் - அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும் ‘விசா‘ வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அதனை மறைக்கத்தான் அமலாக்கத்துறை தொடங்கி அத்தனை அமைப்புகளையும் ஏவி அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன. ‘இந்தியா’வில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டியதே நமது முதன்மையான பணி.
இந்தியாவின் எதிரிகளான மதவாத - ஜனநாயக விரோத - மாநில உரிமைகளைப் பறிக்கும் சக்திகளை உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும் அடையாளம் காண்பீர்! மக்களிடம் அடையாளப்படுத்துவீர்! நாற்பதும் நமதே - நாடும் நமதே என்ற இலக்குடன் இப்போதே ஆயத்தமாவீர்!”. இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.