Protein powders: கட்டுமஸ்தான உடல் போதுமா? உயிர் வேண்டாமா? ஸ்டிராய்டு, புரோட்டீன் - சென்னையில் பயங்கரம்
Protein powders: சென்னையை சேர்ந்த பாடிபில்டர் ஸ்டிராய்டு ஊசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Protein powders: சென்னையை சேர்ந்த பாடிபில்டர் மருத்துவரின் பரிந்துரைகளின்றி, புரோட்டின் பவுடர் போன்றவற்றை உட்கொண்டதாக கூறப்படுகிறது.
பாடிபில்டர் உயிரிழப்பு:
சென்னையை சேர்ந்த ராம்கி என்பவர் உடலை கட்டுமஸ்தானாக வைத்திருக்க ஸ்டிராய்டு ஊசி மற்று புரோட்டின் பவுடர்களை உட்கொண்டுள்ளார். அதுவும் மருத்துவரின் ஆலோசயை பெறாமல், ஜிம் பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் அவற்றை உட்கொண்டுள்ளார். இதனால், கல்லீரல் பாதிக்கப்பட்ட 35 வயதான ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதிக புரோட்டீன் உட்கொள்ளல், குறிப்பாக குறைந்த கார்போஹைட்ரேட் உட்கொள்ளலுடன், கீட்டோசிஸுக்கு வழிவகுக்கும், இது கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிகின்றனர். ஆனால், இதுதொடர்பான போதிய விழிப்புணர்வு இன்றியே இளைஞர்கள் பலரும் புரோட்டீன் பவுடர் மற்றும் ஸ்டிராய்டு ஊசிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டிராய்டு ஊசி மற்று புரோட்டினின் பக்க விளைவுகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மத்திய அரசு எச்சரிக்கை:
இந்தியாவில் காணப்படும் மொத்த நோய்ச் சுமையில் 56.4% ஆரோக்கியமற்ற உணவுவகைகளால் ஏற்படுவதாக இந்தியமருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) அறிக்கை குறிப்பிடுகிறது. வழக்கமாக அதீத உப்பு, சர்க்கரை, கொழுப்புள்ள உணவு வகைகள்தான் ஆரோக்கியமற்றவை என்று வலியுறுத்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், கடந்த ஆண்டு வெளியிட்ட தனது அறிக்கையில் இளைய சமுதாயத்தினரால் அதிகம் விரும்பி உட்கொள்ளப்படும் புரதப் பொடிகளும் ஆரோக்கியமற்றவை என்று எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை உணராமல் தான் ஏராளமானோர் இதனை பயன்படுத்துகின்றனர்.
புரோட்டின் பவுடர் தயாரிக்கப்படுவது எப்படி?
பொதுவாக புரதப் பொடிகள் பால், முட்டை, பாலாடைக் கட்டி ஆகியவற்றிலிருந்தும் சோயாபீன்ஸ், பட்டாணி, அரிசி போன்ற தாவரப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. பனீரிலிருந்து ‘வே’ எனும் புரதப் பொடி (Whey protein powder) தயாரிக்கப்படுகிறது. வழக்கத்தில், வணிக நோக்கத்தில் புரதப் பொடிகளில் கூடுதலாகச் சர்க்கரை சேர்க்கப்படுகிறது; கலோரிகள் இல்லாத செயற்கை இனிப்புகளும், பலதரப்பட்ட செயற்கைச் சுவையூட்டிகளும் கலக்கப்படுகின்றன. ‘வே’ புரதப் பொடிகளில் இன்சுலினை ஒத்த வளர்ச்சிக் காரணிகள் (Insulin-like growth factor 1 - IGF-1) இருக்கின்றன.
பாதிப்புகள் இவ்வளவா?
புரோட்டின் பவுடரை நீண்ட காலம் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது, பயனாளிக்கு எலும்பு வலுவிழக்கிறது. சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. ரத்தத்தில் ஹார்மோன் சமநிலை சீர்குலைகிறது. இரண்டாம் வகை சர்க்கரை நோய் வரக்கூடும். புரோட்டின் பவுடரில் உள்ள இன்சுலினை ஒத்த வளர்ச்சிக் காரணிகள் சில வகை புற்றுநோய்களோடு தொடர்புடையவை. மேலும், இந்தப் பொடிகளில் ‘கிளைச் சங்கிலி அமினோ அமிலங்கள்’ (Branched Chain Amino Acids - BCAAs) நிறைந்துள்ளன.
இவை உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற தொற்றா நோய்களைத் தூண்டுவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. பால் மற்றும் சர்க்கரையை செரிமானம் செய்வதில் சிக்கல் உள்ளவர்கள், புரதப் பொடியைப் பயன்படுத்தும்போது இரைப்பை மற்றும் குடல் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும். சில புரோட்டீன் பவுடர்களில் ஆபத்தான பூஞ்சைக் கொல்லிகள் ( fungal aflatoxins) மற்றும் பூச்சிக்கொல்லிகள் இருக்கலாம். அதிகப்படியான புரோட்டீன் பவுடர் பயன்பாடு மூளையை பாதிக்கும் அபாயத்தில் தள்ளும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிர்ச்சியூட்டும் கலப்படங்கள்:
புரதப் பொடிகளில் ஈயம், காட்மியம், பாதரசம் மற்றும் ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் இருப்பதை சில ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் பிஸ்பெனால்-ஏ (BPA) என்ற வேதிப்பொருள், சில புரதப் பொடிகளில் காணப்பட்டுள்ளது, மேலும் இது பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே உங்களுக்கான புரோட்டீன் பவுடர்களை தேர்வு செய்யும்போது கவனமுடன் இருப்பது அவசியம்.
பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை?
- மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அதிக அளவில் புரதப் பொடிகளை உட்கொள்ள வேண்டாம்.
- சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறுகள் உள்ளவர்கள், பால் ஒவ்வாமை உள்ளவர்கள் புரதப் பொடிகளைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
- புரதப் பொடிகளைப் பயன்படுத்தும் போது, தயாரிப்பு நிறுவனத்தின் அறிவுறுத்தல்களைப் படித்துப் பின்பற்றுங்கள்
- தூய்மை மற்றும் பாதுகாப்பிற்காக மூன்றாம் தரப்பினரால் சோதிக்கப்பட்ட பிராண்டுகளைத் தேர்வு செய்யவும்.
- பொருட்கள், சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் சாத்தியமான ஒவ்வாமைகளுக்கு கவனம் செலுத்துங்கள்
- குறிப்பாக புரதப் பொடிகளை உட்கொள்ளும்போது நிறைய தண்ணீர் குடிக்கவும்
- உணவு வழியாக புரதத்தை எடுத்துக்கொள்வது நல்லது.
பயன்படுத்துபவர்கள் யார்?
காசநோய், சவலை நோய், புற்றுநோய் போன்றவற்றால் உடல்நலம் குறைந்தவர்களின் உடல் ஊட்டத்துக்குச் சத்துள்ள உணவு வகைகளோடு புரதப் பொடிகளையும் புரத பானங்களையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். அதேநேரம், உடல்எடையைக் கூட்ட விரும்புபவர்களும் புரதப் பொடிகளைப் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாகப் புரதப் பொடிகளை உட்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.
தங்கள் உணவில் புரதச் சத்து குறைவாக இருப்பதாகக் கருதும் சைவ உணவாளர்களில் பலரும் இடைவேளை நேரத்தில் புரதப் பொடிகளை உட்கொள்கிறார்கள். முழுமையான உணவு உட்கொள்ள நேரம் இல்லாதவர்களும் அவசரத்துக்குப் புரதப் பொடிகளைப் பயன்படுத்துகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாகத் தடகள விளையாட்டு வீரர்கள், ‘ஜிம்’ பயிற்சி ஆர்வலர்கள், பளு தூக்குபவர்கள், தசை அழகை விரும்புகிறவர்கள் போன்றோர் உடனடியாக உடல் கட்டமைப்பைக் கூட்ட வேண்டும் என்னும் ஆர்வத்தில் மருத்துவ ஆலோசனை இல்லாமலேயே புரதப் பொடிகளை உட்கொள்கிறார்கள். இது மிகவும் தவறானது மற்றும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















