Supreme Court: தமிழ்நாடு செய்த சம்பவம் - நாடே ஆச்சரியம் , உச்சநீதிமன்றம் கையில் எடுத்த சூப்பர் பவர், எப்படி சாத்தியம்
Supreme Court: தமிழ்நாடு ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க, உச்சநீதிமன்றம் பயன்படுத்திய அதிகாரம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Supreme Court: தமிழ்நாடு ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க, உச்சநீதிமன்றம் பயன்படுத்திய அதிகாரம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
உச்சநீதிமன்றம் அதிரடி:
தமிழ்நாடு சட்டமன்றத்தால் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவியை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. மேலும், அரசியலமைப்பு பிரிவு 142-ஐ பயன்படுத்தி, குறிப்பிட்ட 10 மசோதாக்களுக்கும் நீதிமன்றமே அனுமதி அளித்து நாட்டையே திரும்பி பார்க்கச் செய்துள்ளது. அசாதாரண அதிகாரங்களை வழங்குகிறது குறிப்பிட்ட அந்த பிரிவானது "முழுமையான நீதியை" வழங்க நீதிமன்றத்தை அனுமதிப்பதாக நீதித்துறையினர் குறிப்பிடுகின்றனர். முந்தைய காலத்தில் இது அரிதாகவே பயன்படுத்தப்பட்ட சட்டப் பிரிவாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் இது தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. பிரிவு 142 இன் பயன்பாடு "நீதித்துறை அத்துமீறல்" எனவும் முன்பு விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.
ஆளுநருக்கு அட்வைஸ்:
ஆளுநரின் நடவடிக்கையை "முட்டுக்கட்டை" என்று விமர்சித்த நீதிபதிகள், பிரிவு 142-ன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி, 10 மசோதாக்களும் ஒப்புதல் பெற்றதாக அறிவித்தனர். இது நீதித்துறையின் அத்துமீறல் அல்ல என்று நியாயப்படுத்திய நீதிபதிகள், ”ஆளுநர் சட்டமன்ற ஜனநாயகத்தின் தீர்க்கப்பட்ட மரபுகளுக்கு உரிய மரியாதையுடன் செயல்பட வேண்டும், சட்டமன்றத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் மக்களின் விருப்பத்தையும், மக்களுக்குப் பொறுப்பான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் மதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
ஒரே ஆண்டில் மூன்று முறை:
அரிதாகப் பயன்படுத்தப்படும் பிரிவு 142, 2024 இல் மட்டுமே மூன்று முறை பயன்படுத்தப்பட்டது.
- மிக சமீபத்தில், கடந்த அக்டோபரில், ஐஐடி தன்பாத்தில் ஒரு தலித் இளைஞரை கட்டண காலக்கெடுவைத் தவறவிட்டதால், சேர்க்க முடியாது என கூறப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவருக்கான அனுமதியை உறுதி செய்தது.
- முன்னதாக ஏப்ரல் 2024 இல், ஒரு தரப்பினர் விவாகரத்தை எதிர்த்தபோதும் திருமண உறவு மிகவும் மோசமாக இருந்ததால், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து வழங்க உச்ச நீதிமன்றம் இந்த விதியைப் பயன்படுத்தியது.
- பிப்ரவரியில், சண்டிகரில் நடந்த மேயர் தேர்தலின் முடிவுகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் பிரிவு 142 ஐப் பயன்படுத்தியது, அங்கு நியாயமான தேர்தல் செயல்முறையை சீர்குலைப்பதற்கான சான்றுகள் இருந்தன என்று விளக்கமளித்தது
உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் என்ன?
அரசியலமைப்பின் பிரிவு 142 ஆனது “உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தி, அதன் முன் நிலுவையில் உள்ள எந்தவொரு காரணத்திலோ அல்லது விஷயத்திலோ முழுமையான நீதியைப் பெறுவதற்குத் தேவையான ஆணையை அல்லது உத்தரவை பிறப்பிக்கலாம். மேலும், அவ்வாறு நிறைவேற்றப்பட்ட எந்தவொரு ஆணையும் அல்லது அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவும், நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழும் பரிந்துரைக்கப்பட்ட முறையில் இந்திய எல்லை முழுவதும் அமல்படுத்தப்படும். மேலும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் பரிந்துரைக்கும் வகையில் செயல்படுத்தப்படும்’ என விளக்குகிறது.
ஆளுநர் வழக்கின் தீர்ப்பின் தாக்கம் என்ன?
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம், மசோதாக்களை காலவரையின்றி ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், அரசியலமைப்பின் 200வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டமைப்பிற்குள் அவர் செயல்பட வேண்டும் என்றும் அறிவித்தது. இதன் மூலம், ஆளுநர்கள் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜக அரசு அரசியல் செய்வதாக நிலவும் குற்றச்சாட்டிற்கு தீர்வு கிடைத்துள்ளது. நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் இந்த தீர்ப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் சில பிரிவுகளைச் சேர்ந்த மசோதாக்களுக்கு ஒரு மாதத்திற்குள்ளும், சில பிரிவுகளை சேர்ந்த மசோதாக்களுக்கு அதிகபட்சமாக 3 மாதங்களுக்கும் ஒப்புதல் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, 'பாக்கெட் வீட்டோ'வைத் தடுக்கும் ஒரு மைல்கல் முடிவாகும். மேலும் சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் செயல்பட ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கிறது. பிரிவு 142 இன் கீழ் நீதிமன்றம் தனது அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தி 10 மசோதாக்களை அனுமதித்த அரிய நிகழ்வாகவும் உள்ளது.





















