Karur: தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம்; கரூர் ஜவுளி நிறுவனங்களின் பொருட்கள் பாதிப்பு
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்படைந்திருக்கும் கரூர் ஜவுளி நிறுவனங்கள்.
கரூரில் உற்பத்தியாகும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் சுமார் ரூ.6000 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதியாகும் ஜவுளி பொருட்கள் தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமீபத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழை மற்றும் வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது. கரூரிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்ட வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் துறைமுக கிடங்குகளில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்தது. பெரும் மழையாலும் வெள்ளத்தாலும் கிடங்குகளில் மூன்று அடி உயரத்திற்கு தண்ணீர் புகுந்து ஜவுளி பொருட்கள் வைத்திருந்த அட்டைப்பெட்டிகள் நனைந்து தண்ணீரில் மூழ்கியது. இரண்டு நாட்களுக்கு இதைப் பற்றிய எந்த செய்தியும் கரூரில் இருக்கும் ஜவுளி நிறுவனங்களுக்கு தெரியவில்லை. தொடர்ந்து கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் சேதுபதி மற்றும் பல நிறுவனங்களை சார்ந்த நிர்வாகிகளும் தூத்துக்குடிக்கு நேரில் சென்று கிடங்குகளையும் அதில் பாதிக்கப்பட்டுள்ள பொருட்களையும் ஆய்வு செய்தனர்.
கரூர் ஜவுளி நிறுவனங்களின் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் சுமார் ரூ.25 கோடி அளவிற்கு தூத்துக்குடியில் உள்ள பல கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சரக்குகளில் பெரும்பாலான சரக்குகள் மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கிடங்குகளின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, கிடங்குகளில் செய்யப்பட்டிருக்கும் காப்பீடுகள் பற்றி தெரிந்து கொண்டு, காப்பீடு நிறுவனங்களின் ஆய்வு உடனடியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கிடங்குகளின் மூலம் செய்யப்பட்டிருக்கும் காப்பீட்டு நிறுவனங்களின் ஆய்வு நிறைவுற்ற பிறகு, ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் சார்பில் மரைன் இன்சூரன்ஸ் என்று கூறக்கூடிய கடல் வழி மார்க்கத்திற்கான போக்குவரத்து காப்பீடு இருக்கும் நிறுவனங்களின் சரக்குகளுக்கு காப்பீடு ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து சரக்குகளையும் அந்தந்த நிறுவனங்களின் கிடங்குகளுக்கு மாற்றி சேதமடைந்திருக்கும் அட்டைப்பெட்டிகளையும் அதில் உள்ள ஜவுளி பொருட்களையும் ஆராய்ந்து சேதமடையாமல் நல்ல நிலையில் இருக்கும் சரக்குகளை பிரித்து நல்ல நிலையில் உள்ள சரக்குகளை ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
சில ஜவுளி நிறுவனங்கள் தங்களுடைய சரக்குகளுக்கு காப்பீடு செய்யாமல் இருப்பதால், சேதம் அடைந்திருக்கும் சரக்குகளுக்கு கிடங்குகளின் மூலம் செய்யப்பட்டிருக்கும் காப்பீட்டின் மூலம் ஈட்டுத்தொகை பெற, கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் மூலம் கிடங்குகளின் நிர்வாகத்திற்கும், கிடங்கு நிர்வாகிகளின் சங்கத்திற்கும், கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜவுளி நிறுவனங்களின் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு கிடைத்த பிறகு சங்கத்தின் நிர்வாகிகள் தூத்துக்குடியில் உள்ள கிடங்குகள் அதனுடைய காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் கிடங்குகளின் சங்க நிர்வாகிகள் ஆகியோரை நேரில் சந்தித்து சேதமடைந்த பொருட்களுக்கான காப்பீட்டு தொகையை பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ள இருக்கின்றார்கள்.