Udanpirappe Va : ‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
’முதல்வரிடம் நேரடியாக 234 தொகுதி நிர்வாகிகளும் குறைகளை சொல்லி வரும் நிலையில், சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் என பலருக்கும் வயிற்றில் புளி கரைந்துக்கொண்டிருக்கிறது’

2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே தேர்தல் பணிகளை துவக்கியிருக்கிறது திமுக. மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம், மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் என திமுகவினர் படுபிசியாக பணியாற்றத் தொடங்கியிருக்கும் நிலையில், நிர்வாகிகளின் குறைகளை, புகார்களை திமுக தலைமை செவிமடுத்து கேட்கவில்லை என்று பலரும் புலம்பியிருந்தனர்.
‘உடன்பிறப்பே வா’ குறைகளை கேட்கும் முதல்வர்
இது முதல்வரும் திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதும் கலைஞர் கருணாநிதி பாணியில், ’உடன்பிறப்பே – வா’ என்ற தலைப்பில் 234 தொகுதியை சேர்ந்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என அத்தனை பேரையும் ஓன் டூ ஒன் என்ற ரீதியில் தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தப்படும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, பொதுக்குழு முடிந்ததும் உடனே அந்த திட்டத்தை கையெலெடுத்து உடன்பிறப்புகளை ஒவ்வொருவராக சந்தித்து பேசிவருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
ஒவ்வொரு தொகுதியைச் சார்ந்த கழக உடன்பிறப்புகளுடன் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் "one to one" பேச இருக்கிறார். தொண்டர்களை வரவேற்க அண்ணா அறிவாலயம் தயார் நிலையில் உள்ளது! 🌄#உடன்பிறப்பே_வா pic.twitter.com/wQCfgeSkDE
— DMK IT WING (@DMKITwing) June 13, 2025
மனக்குமுறலை கொட்டும் தொண்டர்கள் – கவனித்து கேட்கும் திமுக தலைவர்
கடந்த 13ஆம் தேதி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொடங்கப்பட்ட ‘உடன்பிறப்பே – வா’ சந்திப்பில் ஒவ்வொரு சட்டமன்றம் வாரியாக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை அழைத்து முதல்வர் குறைகளையும் தொகுதி நிலவரத்தையும் கேட்டு வருகிறார். இதனால், இதுவரை செய்வதறியாது, உண்மையை கட்சி தலைமைக்கு சொல்ல முடியாமல் தவித்த நிர்வாகிகளுக்கு, கட்சி தலைவரிடமே நேரடியாக தங்களது குறைகளையும் நிறைகளையும், தொகுதியின் தற்போதைய நிலவரத்தையும், அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்களின் செயல்பாடுகளையும் சொல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், ‘தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது மாதிரி’ தங்களது உள்ளத்தில் இருந்ததை ’உடன்பிறப்பே வா’ என்ற திட்டத்தின் மூலம் கட்சி தலைவரிடமே தெரிவித்து வருகின்றனர்.
உடன்பிறப்பே வா!#DMK #AnbilMaheshPoyyamozhi #AnbilMaheshForever @anbil_mahesh pic.twitter.com/XLV6MBkAot
— Anbil Mahesh Forever (@AnbilMahesh4evr) June 13, 2025
உற்சாகத்தில் தொண்டர்கள்
முதல்வரே நேரடியாக கட்சியினரிடம் பேசுவதாலும் அதுவும் ஒன் டூ ஒன் பேசுவதாலும் உற்சாகம் அடைந்துள்ள திமுக தொண்டர்கள், தொகுதிக்கு தேவையானவற்றை எந்த தடையும் இன்றி முதல்வரிடம் சொல்லி வருகின்றனர். அதே நேரத்தில், தொகுதியின் முக்கிய பிரச்னைகள், தலைவலியாக இருக்கும் நிர்வாகிகள் குறித்தும் அவர்களுக்கு முதல்வரிடமே பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதுவரை விழுப்புரம், சிதம்பரம், உசிலம்பட்டி, பரமத்தி வேலூர், கவுண்டம்பாளையம், பரமக்குடி, ஸ்ரீரங்கம் , குன்னம், RK நகர் , கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம் ஆகிய 12 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை நேரில் வரவழைத்து சந்தித்துள்ளார் முதல்வர்.
இக்கூட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் நேரடியாகவே முதல்வரை சந்தித்தனர். மாவட்டச் செயலாளர்களைத் தாண்டி கட்சியின் தலைமைக்கு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான இந்த வாய்ப்பை சிறப்பான முறையில் ஏற்படுத்தி தந்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த சந்திப்பின் மூலம் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியினர் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறார்கள்
தயங்குபவர்களுக்கு ‘புகார் பெட்டி’
தலைவர், முதல்வரிடம் சொல்ல முடியாத விஷயங்களை கடிதமாக எழுதி தரலாம் என்றும், அதற்காக தனியாக அறிவாலயத்தில் புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளதால், சரியாக செயல்படாத அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் மீது புகார்கள், ஆலோசனைகளும் குவிந்து வருகிறது. இதனை உடனடியாக சரி செய்யும் அனைத்து ஏற்பாடுகளையும் திமுக தலைமை ‘உடன்பிறப்பே – வா’ மூலம் முன்னெடுத்துள்ளது.





















