நடிகை வனிதா படத்தில் ராத்திரி சிவராத்திரி பாடல்.. இளையராஜா அவசர வழக்கு.. மீண்டும் காப்பிரைட் சர்ச்சை
வனிதா விஜயகுமார் இயக்கத்தில் இன்று வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆரம்ப காலகட்டத்தில் சில படங்களில் நடிகையாக நடித்த வனிதா, நடிகர் விஜயுடன் சந்திரலேகா படத்தில் நடித்தார். பின்னர், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமானார். குக் வித் கோமாளி, பிக் பாஸ் தமிழ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழக மக்கள் மத்தியில் மீண்டும் வலம் வந்தார். இயக்குநர் வாசுவிடம் உதவி இயக்குநராகவும் இருந்திருக்கிறார் வனிதா
இயக்குநர் அவதாரம்
சினிமாவில் பணியாற்றிய அனுபவங்களை வைத்து MR & MRS படத்தின் மூலம் வனிதா இயக்குநராக களமிறங்கியுள்லார். இப்படத்தில் அவரும் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இதில், வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இணைந்து நடித்திருக்கிறார். இதேபோல் ஷகீலா, செஃப் தாமு, ஸ்ரீமன், ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், பாத்திமா என பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை வனிதா மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். காதல் ரொமாண்டிக் கதையாக உருவாகியுள்ள இப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு
இந்நிலையில் வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்திருக்கிறார். அதில், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியான MR & MRS படத்தில் தனது இசையில் உருவான பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ராத்திரி சிவராத்திரி பாடல்
ராத்திரி சிவராத்திரி பாடலை மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தில் அனுமதியில்லாமல் பயன்படுத்தியிருப்பதாகவும், மேலும், இந்த பாடலை வனிதா இயக்கியுள்ள படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற பாடலை நீக்க கோரியது சர்ச்சையாக மாறியிருக்கிறது. அவருக்கு ஆதரவாக கங்கை அமரனும் பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் தேனப்பன் இளையராஜாவை தாக்கி பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த விவகாரத்தில் வனிதா என்ன செய்வார் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.





















