Govt School Admission: 3.35 லட்சத்தைக் கடந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை; இன்னும் அதிகரிக்குமா?
2025ஆம் ஆண்டில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டத்தில் 7,460 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6850 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

2025ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 3.35 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 24 ஆயிரத்து 338 அரசு தொடக்கப்பள்ளிகளும், 6992 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 3129 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என 37 ஆயிரத்து 553 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
50-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் அறிமுகம்
இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு 50-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை உணவுத் திட்டமும் புதுமைப் பெண் திட்டமும் 7.5 சதவீத இட ஒதுக்கீடும் மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி இழுத்துவந்தன.
அரசுப் பள்ளிகளில் சேரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, உணவு, எழுதுபொருட்கள் என அனைத்துமே இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. உண்ண உணவு, உடுத்த உடை ஆகியவற்றுடன் பல்வேறு விதமான உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
மொத்தம் 3.35 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
எனினும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 3.35 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, கே.ஜி. சேர்க்கை எனப்படும் மழலையர் பள்ளிகளில், ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 26,390 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1ஆம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் மொத்தம் 1,82,168 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆங்கில வழிக் கல்வியில் 54,684 பேர் சேர்ந்து உள்ளனர். மேலும் 2ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 72,186 பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் அதிகம்
இதில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டத்தில் 7,460 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6850 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரியில் 827 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
2025ஆம் ஆண்டு மொத்தம் 5 லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உளது குறிப்பிடத்தக்கது.






















