CM Inspection:சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்: வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு
கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் சேலத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினார்.
கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்துத் துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கிறார். இதனையொட்டி, சென்னையில் இருந்து சேலத்திற்கு தனி விமானம் மூலம் முதலமைச்சர் வந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த முதல்வருக்கு தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனையடுத்து சேலம் செல்லும் வழியில் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன் அறிவிப்பின்ற சென்ற முதல்வர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். வருவாய்த்துறை மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். வருகைப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்ட முதலமைச்சர் ஓமலூர் தாலுகாவில் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் பற்றியும் கேட்டறிந்தார். தாலுகா அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இரட்டை அடுக்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர், பணிகள் குறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு, சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர், விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாணவ, மாணவயரிடமும் முதலமைச்சர் கலந்துரையாடினார்.
இன்று மாலை நடைபெறும் நிகழ்வில் சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.