(Source: ECI/ABP News/ABP Majha)
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் காவலர்கள்.. அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை
புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல் எனக்கூறி சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை
புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல் எனக்கூறி சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் காவல்துறை தலைமை அலவலகத்தில் உள்ள கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதுவை மாநிலத்தில் தற்போதைய சட்டம் -ஒழுங்கு, கஞ்சா, போதை கும்பல் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்கள் பேசும் போது, புதுவையில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடக்கிறது, சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவுநேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை நிறைவேற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் கொலை வழக்கில் போலீசாருக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும். புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. எனவே அதனை பின்பற்றி தான் ஆக வேண்டும். போக்குவரத்து விதிமீறல் எனக்கூறி சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள். கண்காணிப்பு கேமரா மதுபாருக்கு நேர கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரம் முழுவதும் 180 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்