USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
USA Tariff: இந்திய பொருட்கள் மீதான கூடுதல் 25 சதவிகித வரி நாளை முதல் அமலுக்கு வருவதாக, அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

USA Tariff: இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவிகித வரியை, நிறுத்திவைக்க அமெரிக்கா தயாராக இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
கூடுதல் 25% வரி நாளை முதல் அமல்:
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான கூடுதல் 25 சதவிகித வரி, நாளை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 6ம் தேதி அதிபர் ட்ரம்பால் கையொப்பமிடப்பட்ட உத்தரவை அமல்படுத்துவதாக, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் 50 சதவிகித வரி நாளை முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது. இது உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் இடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. நட்பு நாடு என்பதால், மற்ற நாடுகளை போன்றே இந்தியாவின் மீதான கூடுதல் வரியும் நிறுத்தி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் பொய்யாகியுள்ளது.
குடோனில் இருக்கும் பொருளுக்கும் வரி
உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வாங்குவதற்கு உதவும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக, இந்தியா மீது அமெரிக்கா 25 சதவிகித கூடுதல் வரியும், 25 சதவிகித அபராத வரியும் அறிவித்துள்ளது. இது இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. புதிய 50 சதவிகித வரியானது, 27ம் தேதி நள்ளிரவு 12.01 முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டு குடோனிலிருந்து வெளியே எடுக்கப்படும் பொருட்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய கூட்டாளிகளை டார்கெட் செய்யும் அமெரிக்கா
உக்ரைன் போரில் அமைதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிக்கலாம் அல்லது ரஷ்யா மீதே நேரடியாக கூடுதல் வரி விதிக்கப்படலாம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாவிட்டால், வரும் வாரங்களில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மீது 50 சதவிகித வரிகளை விதித்தாலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா தற்போது வரை எந்த கடுமையான தடைகளையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
இந்திய பொருட்கள் மீதான அபராத வரி என்பது நியாயமற்றது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால், கூடுதல் வரிக்கு தேவை இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களை கருத்தில் கொள்ளாமல், நாட்டிற்கு தேவையான தீர்வுகளுக்கான வழியை அரசு ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். சீனாவை எதிர்கொள்ள இந்தியாவின் நட்பு அவசியம் என சொந்த கட்சி தலைவர்களே வலியுறுத்தினாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் முழு 50 சதவிகித வரியும் நாளை முதல் அமலுக்கு வரும் என ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.





















