லக்கா? பிசினஸ் ட்ரிக்கா? ரூ.334 கோடியை அள்ளிய பெண் - யார் என்று தெரிகிறதா? சட்டம் கொடுத்த ஷாக்
Rekha Jhunjhunwala: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான சட்டத்தை முன்கூட்டியே கணித்ததன் மூலம், நட்சத்திர முதலீட்டாளரான ரேகா ஜுன் ஜுன்வாலா ரூ.334 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.

Rekha Jhunjhunwala: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான சட்டத்தை முன்கூட்டியே கணித்ததன் மூலம், நட்சத்திர முதலீட்டாளரான ரேகா ஜுன் ஜுன்வாலா லாபம் பார்த்தது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ரூ.334 கோடியை அள்ளிய ரேகா ஜுன் ஜுன்வாலா
இந்திய சந்தையில் நட்சத்திர முதலீட்டாளராக கருதப்படும் ரேகா ஜுன் ஜுன்வாலா, சரியான நேரத்தில் எடுத்த ஒரே ஒரு முடிவால் 334 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். நஜாரா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் இருந்த தனது மொத்த பங்குகளையும் அவர் கடந்த ஜுன் மாதம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் தான், மத்திய அரசு புதியதாக கொண்டு வந்த பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் செயலிகளுக்கான மசோதாவால், கடந்த ஒரு வாரத்தில் அந்த நிறுவனம் சுமார் 18 சதவிகித வீழ்ச்சியை கண்டுள்ளது.
வீழ்ச்சி கண்ட கேமிங் செயலிகள்:
பணம் வைத்து விளையாடும் கேமிங் செயலிகளுக்கு எதிரான மசோதாவிற்கு, வெள்ளியன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதன் காரணமாக ட்ரீம் 11, வின்ஸோ மற்றும் போக்கர் பாஸி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள போக்கர் பாஸி செயலியானது, ரேகா அதிகளவில் பங்குகளை கொண்டிருந்த நஜாரா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. சரியான நேரத்தில் அந்த பங்குகளை விற்றதன் மூலம், தனது போர்ட்ஃபோலியோவின் 334 கோடி ரூபாய் இழப்பை தவிர்த்துள்ளார்.
61 லட்சம் பங்குகளை விற்ற ரேகா:
கடந்த மார்ச் மாதத்தில் நஜாரா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 7.06 சதவிகிதம் அதாவது 61.8 லட்சம் பங்குகளை ரேகா தன்வசம் வைத்திருந்தார். திடீரென கடந்த ஜுன் மாதம் 13ம் தேதி அந்த நிறுவனம் தொடர்பான தனது அனைத்து பங்குகளையும் அவர் விற்றுள்ளார். அதில் BSE-யில் விற்ற 13 லட்சம் மற்றும் NSE-யில் விற்ற 14.2 லட்சம் பங்குகளின் சராசரி விலை ஆயிரத்து 225 ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது நஜாரா நிறுவனத்தின் பங்குகளை விற்றதன் மூலம் 334 கோடி ரூபாய் இழப்பை ரேகா தவிர்த்துள்ளார். அதோடு மொத்த பங்குகளையும் விற்றதன் மூலம் அந்த நிறுவனத்துடனான தனது முழு தொடர்பையும் இழந்துள்ளார்.
கடும் வீழ்ச்சி:
புதிய மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து, ரேகா விற்பனை செய்த ஒவ்வொரு பங்கின் விலையும் சுமார் 18 சதவிகிதம் வரை சரிவை கண்டுள்ளது. வெள்ளிக்கிழமை வணிகம் முடிவுக்கு வந்தபோது, முந்தைய செசனில் இருந்ததை காட்டிலும் 4.13 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு நஜாரா நிறுவன பங்குகள் ஆயிரத்து 155 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. நஜாரா பங்குகள் தற்போதைய சூழலில் ஆபத்தானதாக இருந்தாலும், ஒரு காலத்தில் நீண்டகால முதலீட்டில் நல்ல பலனை கொடுத்துள்ளது. கடைசி 5 ஆண்டுகளில் 37 சதவிகித வளர்ச்சியையும், கடந்த ஓராண்டில் 22 சதவிகித வளர்ச்சியையும் கண்டது குறிப்பிடத்தக்கது.
ரூ.38,918 கோடி மதிப்பிலான பங்குகள்:
சரியான நேரத்தில் துல்லியமான முடிவுகளை எடுத்ததன் மூலம், ரேகா ஜுன்ஜுன்வாலா இந்தியாவின் மிக முக்கியமான முதலீட்டாளர்களில் ஒருவராகத் தொடர்ந்து நீடிக்கிறார். அதேநேரம், சரியான நேரத்தில் அவர் பங்குகளை விற்றது எதிர்பாராத விதமாக நடந்ததா? அல்லது இதில் ஏதேனும் மோசடி உள்ளதா? என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது. தற்போதைய சூழலில் 25 நிறுவனங்களில் கிட்டத்தட்ட ரூ.38,918 கோடி மதிப்பிலான பங்குகளை அவர் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச் சந்தையின் பிக் புல் எனப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா ஒரு காலத்தில் நஜாரா நிறுவனத்தில் 10.82 சதவிகித பங்குகளை கொண்டிருந்தார். ஆனால், அவரது மறைவிற்கு பிறகு வாரிசு அடிப்படையில் இந்த பங்குகள், ஜுன் ஜுன்வாலாவின் மனைவியான ரேகாவிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.





















