GST Reforms: தேதி குறிச்சாச்சு.. புதிய ஜிஎஸ்டி வரி முறை எப்போது அமலுக்கு வரும்? ரூ.40,000 கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு
GST Reforms: திருத்தப்பட்ட புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை தசரா பண்டிகை முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

GST Reforms: திருத்தப்பட்ட புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைமூலம், மத்திய அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி வருவாயில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாம்.
புதிய ஜிஎஸ்டி வரி முறை - ரூ.40,000 கோடி பற்றாக்குறை
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரிமுறையை திருத்துவதில் கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, அதன் மூலம் ஏற்பட உள்ள பெரிய வருவாய் பற்றாக்குறையை சமாளிக்கவும் தயாராகி வருகிறதாம். நிதியமைச்சக வட்டார தகவல்களின்படி, திருத்த நடவடிக்கையால் சுமார் 40 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும், வருவாய் பற்றாக்குறை தொடர்பான விவரங்களை ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனராம்.
தற்போதுள்ள நான்கு அடுக்கு வரி விதிப்பு முறையை இரண்டு அடுக்குகளாக மாற்ற, திருத்தத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 5%, 18% என இரண்டு அடுக்களை பின்பற்றுவதோடு, சிகரெட் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 40 சதவிகித வரி விதிக்கப்பட உள்ளதாம். இது வரி நடைமுறையை எளிமையாக்குவதோடு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
”வருவாய் பற்றாக்குறை தற்காலிகமானதே”
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு எதிராக இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் மூலம், ஜிஎஸ்டி மற்று, டிடிஎஸ் வருவாயாக சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு இழக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலான சேவைகளுக்கான வரிகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லையாம். அதேநேரம், மருத்துவ மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் ப்ரீமியம் மீதான ஜிஎஸ்டி வரி அகற்றப்படும் என கூறப்படுகிறது. வருவாய் பற்றாக்குறை தற்காலிகமானதாகவே இருக்கும் என்றும், வரி குறைவால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து வருவாய் மீண்டும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வருவாயை பெருக்கி வாங்கும் திறனை அதிகரிக்கும் விதமாக, கடந்த பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வரி விலக்கை மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தசராவில் புதிய ஜிஎஸ்டி அமல்?
ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 3 அல்லது நான்காம் தேதி டெல்லியில் கூட உள்ளது. முன்னதாக செப்டம்பர் 2ம் தேதி அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இந்த கூட்டம் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கதில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், மாநில அரசுகளுடனான ஆலோசனைக்குப் பிறகு முன்கூட்டியே நடத்தப்படுகிறது. தொடர்ந்து, தசரா பண்டிகை அதாவது அக்டோபர் 2ம் தேதி திருத்தப்பட்ட புதிய ஜிஎஸ்டி வரி முறையை அமல்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அனைத்து சாதகமாக அமைந்தால் அதற்கு முன்பில் இருந்தும் கூட, படிப்படியான அமலுக்கு கொண்டு வரப்படுமாம்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 20 மற்றும் 21ம் தேதி நடைபெற்ற மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய குழுவின் ஆலோசனையின் முடிவில், தற்போதைய வரி விதிப்பு முறையில் உள்ள 12 மற்றும் 28 சதவிகித வரி அடுக்குகளை முற்றிலுமாக நீக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.





















