கொளத்தூரில் ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக.. களத்தில் இறக்கப்படும் பவன் கல்யாண்
சென்னை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பவன் கல்யாண் பிரச்சாரம் செய்வார் என தமிழக பாஜக அறிவித்துள்ளது.

ஆந்திர துணை முதல்வர் முருக பக்தர் பவன் கல்யாண் சென்னை கொளத்தூரில் பிரச்சாரம் செய்து திமுகவை வீழ்த்துவார் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
களத்தில் இறக்கப்படும் பவன் கல்யாண்:
இதுகுறித்து தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், "ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்றி பெற முடியுமா? பவன் கல்யாண் வெற்றி பெற்ற பின் என்ன வேண்டுமானாலும் அவர் பேசட்டும். நாங்கள் கேட்கிறோம் என்று அறமற்ற துறையின் அமைச்சர் சேகர்பாபு, முதல்ல ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் 2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாமல், வெற்றி பெற்ற தேர்தல் சரணாகதி வரலாற்றை மறந்து பேசுகிறார்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் 68,677 ( 48.35%) வாக்குகள் பெற்று 2734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது எப்படி என்பதை அன்றைய அதிமுக மாவட்ட செயலாளர் சேகர் பாபு மறந்துவிட்டார்.
கொளத்தூரில் ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக:
முதல்வர் ஸ்டாலின் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட அன்றைய அதிமுக சட்டமன்ற வேட்பாளர் சைதை துரைசாமி 65,943 ( 46.43%) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட இருந்தவர், தோற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்ட வரலாறு மறந்துவிட்டு இன்றைய திமுக மாவட்ட செயலாளர் சேகர்பாபு வெட்டியாக வாய் சவால் விடுகிறார்.
பவன் கல்யாண் சென்னையில் போட்டியிடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் மாவட்ட செயலாளராக இருக்கும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், உங்கள் தலைவன் ஸ்டாலினை வெற்றி பெற வைக்க முடியுமா என்பதை மட்டும் சிந்தித்து அரசியல் செய்யுங்கள்.
அறமற்ற துறையின் அமைச்சர் சேகர்பாபு, உங்கள் ஊழல் பாவகரங்களால், திமுக ஆட்சியில் மக்களிடம் கொள்ளையடித்த ஊழல் பணத்தை எல்லாம் கொட்டி கொட்டி கொடுத்து கொளத்தூர் தொகுதி ஏழை மக்களை இந்த முறையும் விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்க வேண்டாம்.
இந்த முறை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவிற்கு தோல்வி நிச்சயம். அதையெல்லாம் மறந்துவிட்டு முழு பக்தர் மாநாட்டில் ஆன்மீக அரசியல் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணக்கு சவால் விடுவது வேடிக்கையாக இருக்கிறது.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் அவர்களை எதிர்த்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு சாதாரண தொண்டர் போட்டியிட்டு வெற்றி பெறப் போகிறார். தமிழக பாஜக மாநில தலைவர் நாகேந்திரன், ஊழல் திமுகவை வீட்டுக்கு அனுப்பும் முதல் தொகுதியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். ஆந்திர துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் பிரச்சாரம் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தப் போகிறது" என குறிப்பிட்டுள்ளார்.





















