Shocking Report: இவ்ளோ நடந்தும் திருந்த மாட்டீங்களா.? விமான நிலையங்கள், விமானங்களில் குறைபாடுகள் - DGCA ஆய்வில் அதிர்ச்சி
அகமதாபாத்தில் மிகப்பெரிய விமான விபத்து நிகழ்ந்து நூற்றுக்கணக்கான உயிர்கள் போன பிறகும், பல முக்கிய விமானங்கள், விமானங்களில் குறைபாடுகள் இருக்கும் அதிர்ச்சித் தகவல் டிஜிசிஏ-வின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் விமானங்களின் பாதுகாப்பில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பல முக்கிய விமான நிலையங்களில் விமான அமைப்புகளில் குறைபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. விமானங்கள் மற்றும் ஓடுபாதைகள் உட்பட பல முக்கிய பகுதிகளில் பிரச்னைகள் இருப்பதாக DGCA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
DGCA ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன.?
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்திற்குப் பிறகு, விமான பாதுகாப்பில் கவனம் செலுத்தும் விதமாக, DGCA இயக்குநர் ஜெனரல் தலைமையிலான 2 சிறப்புக் குழுக்கள், டெல்லி, மும்பை போன்ற நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் விரிவான ஆய்வுகளை சமீபத்தில் மேற்கொண்டன. அந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக, விமான செயல்பாடுகள், சாய்வுதளப் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகள், தகவல் தொடர்பு, உபகரணங்கள், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பணியாளர்களுக்கான மருத்துவ சோதனைகள் போன்ற பல முக்கிய அம்சங்களை உன்னிப்பாக ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுகளில் பல கவலைக்குரிய விஷயங்கள் வெளியாகியுள்ளன. ஒரு விமான நிலையத்தில், டயர்கள் தேய்மானம் காரணமாக தரையிறக்கப்பட்ட உள்நாட்டு விமானத்தை அதிகாரிகள் கண்டுள்ளனர். மேலும், மங்கலான ஓடுபாதையால் ஏற்படும் சிரமங்களையும் கண்டறிந்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில், விமானத்தில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படாமல் தொடர்வதாக DGCA தெரிவித்துள்ளது.
“பயிற்சியின்போதே தவறுகள்“
இதற்கெல்லாம் மேலாக, ஒரு இடத்தில் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் சிமுலேட்டர், உண்மையான விமான இயக்கத்துடன் ஒத்துப்போகவில்லை என்றும், அதன் மென்பொருள் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடுமையான மேற்பார்வை இல்லாததே இதுபோன்ற குறைபாடுகளுக்கு காரணம் என்றும், இது பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கறையில்லாத தன்மையையும் வெளிப்படுத்துவதாக DGCA கூறியுள்ளது. குறைபாடுகள் கண்டறியப்பட்ட விமான நிறுவனங்கள் அல்லது பிற துறைகளின் பெயர்களை DGCA இன்னும் வெளியிடவில்லை.
DGCA உத்தரவு
இருந்தாலும், அடையாளம் காணப்பட்ட அனைத்து குறைபாடுகளும், சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படடு, உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக DGCA தெரிவித்துள்ளது. விமான பயணத்தில் பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இந்த விஷயத்தில் சமரசத்திற்கு இடமில்லை என்றும் DGCA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் பலர் என ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால், இவ்வளவு பெரிய விஷயம் நடந்தும், விமான நிலையங்கள், விமானங்களில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித உயிர்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படும் இத்தகைய அதிகாரிகள் எப்போதுதான் திருந்துவார்களோ என்ற மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.





















