VCK Thiruma: ”சீட்டுக்கு, நோட்டுக்குமா” பிளாஸ்டிக் சேர் - திமுக மீது திருமா அட்டாக்? ”டீ, பன் போதாது, போயிருவேன்”
VCK Thiruma: சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசும் கட்சி விசிக அல்ல என, அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

VCK Thiruma: தேர்தல் அரசியலே வேண்டாமென்று கூட திடீரென அறிவிப்பேன் என, விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
சீட்டுக்கும், நோட்டுக்குமா?
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்,அக்கட்சி தலைவர் திருமாவளவன்பேசிய கருத்துகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக அரசியல் சார்ந்த பேச்சு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தை வைத்து அரசியல் பேசுபவர்களை நோக்கி குறிப்பிட்டு பேசிய திருமாவளவன், “எங்களது அடையாளங்களையும், வரலாறையும் நீங்கள் திருடிக்கொண்டு, அதற்கு புதிய புதிய அடையாளங்களை தந்து, புதிய புதிய விளக்கங்களை தந்து எங்களை பாகுபடுத்தி, பிளவுபடுத்தி, சிதறடித்து, சிதைத்து போட்டிருப்பதை அம்பேத்கர் பிள்ளையாய் இருந்துகொண்டு எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? பெரியாரின் பிள்ளையாய் இருந்துகொண்டு எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? நாங்கள் இயக்கம் அமைத்து இருப்பது நாடாளுமன்ற, சட்டமன்ற சீட்டுகளுக்கு பேரம் பேசுவதற்கு அல்ல.
”தேர்தல் பாதையே வேண்டாம்”
நான் திடீரென தேர்தல் பாதையேயே வேண்டாமென்று சொன்னாலும் சொல்லுவேன். என்றாவது ஒருநாள். இவர்கள் நம்மை சராசரியாக எடைபோடுகிறார்கள். இந்த சீட்டுக்காக, நோட்டுக்காக, பிளாஸ்டிக் சேர்.. இவர்களது புத்தி அவ்வளவு தான். தரையில் அமர்ந்தாலும், பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தாலும், சோபாவில் அமர்ந்தாலும் எல்லாம் ஒன்று என நினைப்பவன் நான். அது எனக்கு பெரிய விஷயமே கிடையாது. சோபாவில் அமர்ந்தால் தான் கெத்து, தரையில் அமர்ந்தால் சாதாரணம் என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் தான் அப்படி ஒரு மதிப்ப்ஈட்டை கொண்டுள்ளனர். எனக்கு அந்த மதிப்பீடுகள் கிடையாது.
”டீ, பன் கொடுத்து ஏமாற்றாதீர்கள்”
எல்லோரும் தேர்தல் கணக்கு போடும்போது, நாம் தேசத்தின் பாதுகாப்பை பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கிறோம். எத்தன்னை இடங்களில் நீங்கள் போட்டியிட இருக்கிறீர்கள் என திரும்ப திரும்ப கேள்வி கேட்கின்றனர். பாவம் அவர்களுக்கு இன்னும் சிறுத்தைகளையும், திருமாவளவனையும் மதிப்பிட தெரியவில்லை. சராசரி இயக்கவாதிகளாக நம்மை பார்ப்பதாலே இந்த கேள்வியை எழுப்புகின்றனர். நாம் அதையெல்லாம் கடந்தவர்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. அம்பேத்கரின் கனவை நினைவாக்க போராடி கொண்டிருக்கும் விசிகவை, டீ, பன் கொடுத்து ஏமாற்றலாம் என கணக்குப் போடாதீர்கள். 10 தொகுதிகளுக்கு மேலே தரமாட்டோம் என கூறுவதெல்லாம் உங்களது மதிப்பீடு. ஆனால், விசிக 234 தொகுதிகளுக்கு தகுதியானது. அந்த வலிமை எங்களுக்கு உள்ளது. ஆளும் திமுக கூட்டணியில் இருந்து கூட நாம் கொடியேற்ற, பேனர் கட்ட, பொதுக்கூட்டங்களை நடத்த போராட வேண்டியுள்ளது” என திருமாவளவன் பேசியுள்ளார்.
திமுக மீது அட்டாக்:
திமுக அமைச்சரை சந்தித்தபோது திருமாவளவன் அமர பிளாஸ்டிக் சேர் வழங்கப்பட்டது பெரும் பேசுபொருளானது. அதை குறிப்பிட்டோ அவர் சில விமர்சனங்களை தற்போது முன்வைத்துள்ளார். மேலும், ஆளும் திமுக கூட்டணியில் இருந்தும் பேனர் வைக்கவும், கொடி நடவும் போராட வேண்டியுள்ளது என்ற குற்றச்சாட்டையும் மீண்டும் மீண்டும் முன்வைத்து வருகிரார். இதன் மூலம், திமுக மீதுள்ள அதிருப்தியை திருமா பகிரங்கமாக வெளிப்படுத்துவதாக சிலர் குறிப்பிடுகின்றனர். அதேநேரம், தேர்தல் நெருங்குவதால் திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து கூடுதல் தொகுதிகளை பெறவே, விசிக இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.






















