PM modi: "அவங்க என்ன வேணா பண்ணட்டும்.. நாங்க இப்படியே தான் இருப்போம்" - பிரதமர் மோடி ப்ராமிஸ்
PM modi On US Tariff: அமெரிக்கா கூடுதல் வரி என்ற பெயரில் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், விவசாயிகளை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PM modi On US Tariff: அமெரிக்காவின் வரி அழுத்தம் அதிகரித்தாலும், அதனை அரசு தாங்கும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி பேச்சு:
இந்திய பொருட்கள் மீதான அமரிக்காவின் கூடுதல் வரி விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதனால், உள்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் உள்ள வியாபாரிகள் உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதாக தங்களது கடைகளுக்கு வெளியே விளம்பரம் செய்யவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
”அழுத்தம் அதிகரித்தாலும்..” - பிரதமர் மோடி
அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். தொடர்ந்து பேசுகையில், “எவ்வளவு அழுத்தம் அதிகாரித்தாலும் பரவாயில்லை. அதனை எதிர்கொள்ளும் வகையில் நாம் நம்மை தொடர்ந்து வலிமைப்படுத்திக் கொண்டே இருப்போம். இன்று உலகம் முழுவதும் பொருளாதாரம் சார்ந்த அரசியல் செய்வதில் அனைவரும் தீவிரமாக உள்ளனர்.
ஆனால், அகமதாபாத் மண்ணிலிருந்து சிறு தொழில்முனைவோர், கடைக்காரர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் காந்திஜியின் மண்ணில் ஒன்றை சொல்கிறேன். சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் அல்லது என் நாட்டின் கால்நடை வளர்ப்பாளர்களாக இருந்தாலும் சரி, உங்கள் நலன்கள் மோடியின் முதன்மையான முன்னுரிமை என்று நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எனது அரசாங்கம் எப்போதும் உங்களைப் பாதுகாக்கும், உங்களுக்கு எந்தத் தீங்கும் வர அனுமதிக்காது.
”சுதேசி பொருட்களை வாங்குங்கள்”
இது பண்டிகைகளின் காலம். இப்போது நவராத்திரி, விஜயதசமி,தீபாவளி ஆகியவை அடுத்தடுத்து வருகின்றன. இவை நமது கலாச்சாரத்தின் கொண்டாட்டங்கள், ஆனால் அவை தன்னம்பிக்கை கொண்டாட்டங்களாகவும் இருக்க வேண்டும். எனவே, நாம் நம் வாழ்வில் ஒரு மந்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எனது வேண்டுகோளை மீண்டும் ஒருமுறை உங்களிடம் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் எதை வாங்கினாலும் அது 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கட்டும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு நமது நாட்டு குடிமக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அலங்காரப் பொருட்களாக இருந்தாலும் சரி, பரிசுப் பொருட்களாக இருந்தாலும் சரி, நமது சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களைத் தேர்ந்தெடுப்போம். பிற நாடுகளிலிருந்து பெறப்படும் பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்கவும் வணிகங்களை நான் ஊக்குவிக்கிறேன். இந்த சிறிய ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நமது நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்” என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவிற்கு பதிலடி:
அமெரிக்காவின் விவசாயப் பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்து விட மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாகவே, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி, இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விகித்துள்ளது. இதில் 25 சதவிகித வரி ஏற்கனவே அமலுக்கு வந்த நிலையில், அடுத்த 25 சதவிகிதமும் ஒரு சில நாட்களில் அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தான், அமெரிக்கா வரிகள் மூலம் அழுத்தம் கொடுத்தாலும், இந்திய நலன்களை காப்பதில் அரசின் முடிவு மாறாது என உறுதிபட தெரிவித்துள்ளதோடு, வெளிநாட்டு பொருட்களை சார்ந்து இருப்பதை குறைக்கவும் நாட்டு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.





















