IITMadras: ஐஐடி சென்னை சாதனை: பாக்டீரியா எதிர்ப்பு சக்தியை நொடியில் கண்டறியும் மலிவு விலை சாதனம்!
‘மின்வேதியியல் மின்மறுப்பு நிறமாலையை’ அடிப்படையாகக் கொண்ட இந்த ε-µD சாதனத்தால் 3 மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்க முடியும்.

ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள் புதுமையான, விலைகுறைந்த மைக்ரோஃப்ளூய்டிக் சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதுமையான மற்றும் மலிவு விலையில் மைக்ரோஃப்ளூய்டிக் சாதனத்தை உருவாக்கியுள்ளனர். பாக்டீரியாக்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவையா அல்லது எளிதில் பாதிக்கப்படுகின்றனவா என்பதை இதனால் விரைவாகக் கண்டறிய முடியும்.
கார்பன் மின்முனை அடிப்படை
மதிப்புமிக்க உலோகங்கள், சிக்கலான உற்பத்தி செயல்முறைகள் அல்லது மிகவும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை சார்ந்துள்ள நவீன நுட்பங்களைப் போலன்றி, ε-µD என்றழைக்கப்படும் இந்த ஆய்வகம் சார்ந்த சிப் சாதனம், எளிய மைக்ரோஃப்ளூய்டிக் சிப்பில் பதிக்கப்பட்ட திரை-அச்சிடப்பட்ட கார்பன் மின்முனைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இந்த சாதனத்தின் விலை குறைவாக இருப்பதுடன், சிறிய மருத்துவமனைகள், கிராமப்புற சுகாதார மையங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
3 மணி நேரத்திற்குள் முடிவு
வேகம், உணர்திறன் கொண்டதாகவும் பயன்படுத்த இலகுவாகவும் வடிவமைக்கப்பட்ட இந்த சாதனம், மேம்பட்ட ஆய்வக உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில், பாக்டீரியா தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் வலுவான ஆற்றலைக் கொண்டுள்ளது. ‘மின்வேதியியல் மின்மறுப்பு நிறமாலையை’ அடிப்படையாகக் கொண்ட இந்த ε-µD சாதனத்தால் 3 மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்க முடியும்.
நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) என்பது உலக சுகாதார அமைப்புகள் தற்போது எதிர்கொள்ளும் மிக முக்கிய சவால்களில் ஒன்றாகும். நுண்ணுயிர் எதிர்ப்பை உலக சுகாதாரத்திற்கு எதிரான முதல் 10 அச்சுறுத்தல்களில் ஒன்றாக உலக சுகாதார அமைப்பு (WHO) அடையாளம் கண்டுள்ளது. 2019-ம் ஆண்டில் உலகளவில் கிட்டத்தட்ட 4.95 மில்லியன் உயிரிழப்புகள் பாக்டீரியா நுண்ணுயிர் எதிர்ப்புடன் தொடர்புடையவை என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
நோய் கண்டறியும் வசதி குறைந்த, தொற்றுக்கு சிகிச்சை கிடைக்காத, சரியாக நிர்வகிக்கப்படாத நிலையில் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இந்த சுமை அதிகமாக இருந்து வருகிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பு
நுண்ணுயிர் எதிர்ப்பு உணர்திறன் சோதனை (AST) என்பது குறிப்பிட்ட தொற்றுக்கு எதிராக எந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செயல்படும் என்பதை அடையாளம் காண பயன்படுத்தப்படும் முக்கிய செயல்முறையாகும். மருத்துவர்கள் சரியான சிகிச்சையைத் தேர்வுசெய்யவும், நுண்ணுயிர் எதிர்ப்புக்கு முக்கிய காரணமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாட்டைத் தவிர்க்கவும் இந்த செயல்முறை உதவுகிறது.
இருப்பினும், பாக்டீரியா வளர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு அவற்றின் எதிர்வினையைக் கவனிப்பது உள்ளிட்ட பாரம்பரிய நுண்ணுயிர் எதிர்ப்பு உணர்திறன் சோதனைக்கு அதிக நபர்கள் தேவைப்படுவதுடன் 48 முதல் 72 மணிநேரம் வரை ஆகக்கூடும். பரந்த-ஸ்பெக்ட்ரம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நிறுத்திவைக்க வழிவகுக்கும் என்பதால் இதனால் தடுப்புமுறை சிக்கல் அதிகரிக்கிறது.
என்ன சிறப்பம்சங்கள்?
இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், ஐஐடி மெட்ராஸ் குழுவினர் ε-µD-ஐ உருவாக்கியுள்ளனர். பாக்டீரியா வளர்ச்சி மற்றும் ஆண்டிபயாடிக் உணர்திறனை மதிப்பிடுவதற்கு மின்வேதியியல் சமிக்ஞைகளைப் பயன்படுத்தும் செலவு குறைந்த பினோடைபிக் சோதனை சாதனமாகும்.
உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ள பல்வேறு அளவுகோல்களை இந்த சாதனம் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை, வேகம், பயன்பாட்டின் எளிமை, நம்பகத்தன்மை ஆகியவை இதில் அடங்கும். குறிப்பாக குறைந்த வள அமைப்புகளில், நுண்ணுயிர் எதிர்ப்பு உணர்திறன் சோதனையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் ε-µD முக்கிய படி என்று ஐஐடி சென்னை பெருமிதம் தெரிவித்துள்ளது.






















