Cheteshwar Pujara: புஜாராவை அசிங்கப்படுத்திய கிரிக்கெட் வாரியம்.. கொந்தளித்த ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா ஓய்வை அறிவித்த நிலையில் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் கிண்டல் செய்துள்ளது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அசைக்க முடியாத தூண் ஆக இருந்தவர் செதேஷ்வர் புஜாரா. இவரது ஆட்டத்தில் தனித்துவம் இருக்கும். புஜாரா களத்தில் இருந்தால் எதிரணியினருக்கு ஒரு வித கலக்கம் இருக்கும். அவரது விக்கெட்டை வீழ்த்துவதில் தான் முனைப்பு காட்ட முயல்வார்கள். ஒருநாள் தொடரை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா சிறந்து விளங்கினார். இந்நிலையில், 36 வயதாகும் அவர் நேற்று அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உலகெங்கிலும் இருக்கும் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புஜாராவுக்கு சச்சின் புகழாரம்
103 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 7,195 ரன்கள் குவித்து இந்திய அணியின் 8ஆவது அதிகபட்ச டெஸ்ட் ரன் குவித்தவர் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி அளவுக்கு கொண்டாடப்படவில்லை என்றாலும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகளில் புஜாராவின் பங்கு அளப்பரியது என்பதை மறக்க முடியாது. இதனைத்தொடர்ந்து கிரிக்கெட் உலகின் மான்ஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் புஜாராவுக்கு புகழாரம் சூட்டினார். அதில், புஜாரா 3ஆவது வீரராக களமிறங்குவதை பார்க்கும் போது ஒருவித அமைதியை தரும். டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ஆழமான காதலை வெளிப்படுத்துவீர்கள். உங்களது அமைதி மற்றும் தைரியம் மிகவும் பிடித்திருக்கும். 2018இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் உங்களது ஆட்டம்தான் கோப்பையை வெல்ல முனைப்பாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அவமதிப்பு
இந்நிலையில், புஜாராவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் புஜாராவை கிண்டல் செய்யும் வகையில் அதன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளானது. அதாவது, செதேஷ்வர் புஜாரா ஓய்வு அறிவித்திருப்பது தொடர்பாக நாங்கள் கருத்து கூறப்போவதில்லை. ஏற்கனவே அவர் ஓய்வில் தான் இருந்தார் என குறிப்பிட்டுள்ளது. புஜாரா கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்துள்ளார். அதனை குத்திக்காட்டும் விதமாக ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் இவ்வாறு பதிவிட்டுள்ளது.
ரசிகர்கள் கோபம்
இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஒருவரை இப்படியா கிண்டல் செய்வது. உங்கள் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமாகவே புஜாரா ஸ்கோர் அடித்திருக்கிறார். நகைச்சுவை என்ற பெயரில் இப்படியா ஒருவரை அவமதிப்பது. இதைத்தான் உங்கள் வீரருக்கும் கற்றுத்தர பாேகிறீர்கள் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
We are not going to comment on Cheteshwar Pujara's decision to retire from Test cricket, because we thought he already was.
— Iceland Cricket (@icelandcricket) August 24, 2025





















