VCK Thiruma: ”இந்து மதம் என்று ஒன்று கிடையாது, அதில் சகோதரத்துவமே இல்லை” - இறங்கி அடித்த திருமா, பேசுமா பாஜக?
VCK Thiruma: இந்து மதம் என்பதே 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லை என, விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

VCK Thiruma: இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை என அரசியலமைப்பு சட்டம் சொல்வதாக, விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
”100 ஆண்டுகள் வாழ ஆசையா?”
விசிக சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய கட்சி தலைவர் திருமாவளவன், நெற்றியில் வைக்கப்பட்ட விபூதி அழிக்கப்பட்டது தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அப்போது, “இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதத்தை ஏன் விமர்சிப்பதில்லை என கேள்வி எழுப்புகிறார்கள். என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள், என் மீது பாசம் வைத்திருப்பவர்கள் பல கோயில்களுக்கு அழைக்கிறார்கள், நான் போகிறேன். கலசத்தில் தண்ணீர் ஊற்ற சொல்கிறார்கள் நான் ஊற்றுகிறேன். நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆசையில் இதையெல்லாம் செய்கிறேனா? என் தாய் என்னை வீட்டிற்கு வரவேற்கும்போது ஆலம் எடுத்து நெற்றியில் திருநீறு பூசுகிறார். அதை ஏற்றுக்கொள்கிறேன். என் தாய்க்கு என்ன மதிப்பை கொடுக்கிறேனோ, அப்படியே மக்களுக்கும் மதிப்பளிக்கிறேன். அது மக்கள் மீது நான் கொண்டுள்ள ஒரு மதிப்பு. இது அற்பர்களுக்கு தெரியாது, ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் தெரியாது.
”இந்து மதம் என்று ஒன்று கிடையாது”
”ஹரியும் சிவனும் ஒன்னு,அறியாதவன் வாயில் மண்ணு” என கூறுகின்றனர். ஆனால், இரண்டும் வெவ்வேறாக இருந்து சண்டை போட்டுகொண்டிருந்தன. இந்த இரண்டையும் ஒன்றாக்கும் முயற்சியை ஆதிசங்கரர் உட்பட பலரும் மேற்கொண்டனர். அந்த காலத்தில் இந்து சமூகம் என்று ஒன்று கிடையாது. அந்த காலத்தில் பார்ப்பனிய எனும் மதம் தான் வைதீக மதமாக இருந்தது. அவர்களும் இந்து கிடையாது, சைவ மற்றும் வைணவம் என்பதும் இந்து மதம் கிடையாது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு 19ம் ஆண்டில் தான், அதாவது200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்து சமயம் எனும் மதம் தோன்றவேயில்லை. இதை உருவாக்கியவர் யார் என்று சொல்லவே முடியாது. இஸ்லாத்தை உருவாக்கியவர் நபிகள் நாயகம், கிறித்துவத்தை உருவாக்கியவர் இயேசு பெருமான். பவுத்தத்தை உருவாக்கியவர் கவுதம புத்தர். இந்து மதத்தை உருவாக்கியவர் யாரென்றே தெரியாது. கேட்டால் இது 50 ஆயிரம், 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அதனால் இதனை யார் உருவாக்கியது என்று தெரியாது என குறிப்பிடுகின்றனர். வரலாறு அப்படி இல்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எதோ ஒரு வடிவில் இன்று இந்து என்ற வடிவம் வந்துவிட்டது.
”பாகுபாடுகளை கொண்ட இந்தியா”
அந்த மதத்தை இந்தியாவின் அரசு மதமாக அறிவிப்பதிலே பிரச்னை இருக்கிறதே அதை பற்றி பேசு. ஏன் அறிவிக்க முடியாமல் போனது? இந்தியா ஏன் மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும்? இது அன்றைய அரசியல் நிர்ணய சபையால் விவாதிக்கப்பட்டதா? இல்லையா? அம்பேத்கர் உள்ளிட்ட பலரும் விவாதித்தார்களா இல்லையா? அம்பேத்கர் எனும் ஒற்றை நபர் மட்டும் இல்லையென்றாரல் இந்து மதம் தான் இன்று நாட்டின் மதமாக மாறியிருக்கும். ஏன் இந்த மதம் அரசு மதமாக ஏற்றுக்கொள்ளப்பவில்லை என்றால், இந்த மதம் அடிப்படையிலேயே பாகுபாடுகளை கொண்ட மதமாக இருக்கிறது.
”இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை”
தோழர்களே இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை என்பதை அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. அதனால் தான் அதனை அரசு மதமாக அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்லாம், சமணம், கிறித்துவம் ஆகிய மதங்கள் சகோதரத்துவத்தை பேசுகிறது. இந்து மதம் பேசுகிறதா? மேல்பாதிக்குள் என்னுள் நுழைய முடியவில்லையே? திருநீறை அழித்துவிட்டேன் என ஆத்திரப்படும் நீங்கள், அந்த கோயிலுக்குள் என்னை அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறீர்களா?கோயிலின் கருவறைக்குள் என்னை அழைத்துச் செல்ல ஒரு போராட்டம் நடத்த முடியுமா? ஓட்டு போடுவதற்காக உன்னையும் என்னையும் முருக பக்தர்கள் என சொல்லி கோல் மால் அரசியலில் வீழ்த்தப் பார்க்கிறார்கள். அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு” என திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார்.






















