Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கரும்பு, மஞ்சள், பூக்கள், புத்தாடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் முதன்மை பண்டிகையாகவும், மிகவும் முக்கியமான பண்டிகையாகவும் திகழ்வது பொங்கல் பண்டிகை ஆகும். நடப்பாண்டில் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளான இந்த பொங்கல் பண்டிகை நாளில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் புத்தம் புது பானையில் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம்.
படுஜோராக நடக்கும் பொங்கல் விற்பனை:
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் என்றாலே முதன்மையாக கருதப்படுவது கரும்பு ஆகும். 2025 பிறந்தது முதலே கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெறத் தொடங்கியது.
கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கரும்பு விற்பனை நேற்று இரவு முதலே மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரும்பு மட்டுமின்றி மஞ்சள் கிழங்கு, பழங்கள் விற்பனையும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் மஞ்சள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் ஏற்றுமதி முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் போன்ற பெருநகரங்களில் உள்ள சந்தைகளில் காய்கறிகளின் வரத்து வழக்கத்தை விட அதிகளவில் உள்ளது.
பூக்கள், துணிகள் விற்பனை அமோகம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லி, சாமந்தி உள்ளிட்ட பூக்களின் வரத்தும் வழக்கத்தை விட அதிகளவு காணப்படுகிறது. விசேஷ நாள் என்பதால் பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகளவு காணப்படுகிறது. தீபாவளி போலவே பொங்கல் பண்டிகைக்கும் மக்கள் புத்தாடைகள் எடுப்பது வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், துணிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதலே தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில் கடைகளில் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று அடுத்தடுத்த நாட்கள் விவசாயத்தையும், கால்நடையும் கொண்டாடும் நாள் என்பதால் ஆடு, மாடுகள் அலங்கரிக்கும் அலங்கார பொருட்களின் விற்பனையும் தீவிரமாக நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். சென்னையில் இருந்து மட்டும் இதுவரை பேருந்துகளில் 6 லட்சம் மக்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர். இன்றும் மக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

