US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
ட்ரம்ப், புதின் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால் இந்தியாவிற்கான வரி அதிகரிக்கும் என அமெரிக்க கருவூல செயலாளர் எச்சரித்துள்ளார்.

ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக இந்தியாவின் இரண்டாம் நிலை வரிகளை அதிகரிப்பது குறித்து, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடத்தும் உயர்மட்ட சந்திப்பின் முடிவைப் பொறுத்து, இந்த வரி உயர்வு இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
“இந்தியாவிற்கான வரிகள் அதிகரிக்க வாய்ப்பு“
அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியர்கள் மீது இரண்டாம் நிலை வரிகளை ஏற்கனவே விதித்துள்ளோம். மேலும், ட்ரம்ப், புதினின் சந்திப்பில், விஷயங்கள் சரியாக நடக்கவில்லை என்றால், தடைகள் அல்லது இரண்டாம் நிலை வரிகள் அதிகரிக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன்" என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளர்.
இந்த மாத தொடக்கத்தில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்கான அபராதமாக 25 சதவீதம் உட்பட, இந்தியா மீது 50 சதவீத வரிகளை டிரம்ப் விதித்தார்.
அமெரிக்காவின் இந்த வரிகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது என்று கூறியது. "எந்தவொரு பெரிய பொருளாதாரத்தையும் போலவே, இந்தியாவும் அதன் தேசிய நலன்களையும், பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.
“ஐரோப்பியர்களும் தடைகளை சுமத்த வேண்டும்“
அந்த பேட்டியின் போது, "அதிபர் ட்ரம்ப், அதிபர் புதினை சந்திக்கிறார். ஐரோப்பியர்கள் அதை எப்படிச் செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர். ஐரோப்பியர்கள் இந்தத் தடைகளில் எங்களுடன் சேர வேண்டும். ஐரோப்பியர்கள் இந்த இரண்டாம் நிலைத் தடைகளைச் சுமத்தத் தயாராக இருக்க வேண்டும்," என்று பெசென்ட் மேலும் கூறியுள்ளார்.
ரஷ்யாவை எச்சரித்த ட்ரம்ப்
இதனிடையே, ரஷ்யா ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் "கடுமையான விளைவுகள்" ஏற்படும் என்றும் ட்ரம்ப் ரஷ்யாவை எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 35 முதல் 40 சதவீதம் ரஷ்யாவிலிருந்து வருகிறது. இது 2021-ல் 3 சதவீதத்திலிருந்து செங்குத்தான அதிகரிப்பாகும். உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, இந்தியா தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவது, அமெரிக்கா உடனான அதன் உறவுகளில் விரிசலுக்கு வழிவகுத்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமல்ல என்றாலும், உக்ரைனில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்பின் முயற்சியால் பாதிக்கப்பட்ட ஒரே நாடு இந்தியாதான்.
ஏற்கனவே ஒரு பேட்டியில், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவை "கொஞ்சம் அடங்காதவர்" என்று பெசன்ட் கூறிய பிறகு, தற்போது இந்தியாவிற்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்ப் - புதின் பேச்சுவார்த்தை எப்படி போகிறது என்பது நாளை தெரிந்துவிடும். அதுவரை காத்திருப்போம்.





















