இனி ஹை பட்ஜெட் படங்கள் வேஸ்ட்தானா?.. ரஜினி இருந்தும் சறுக்கிய கூலி.. கதை வேணும் பாஸ்
ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் ரசிகர்களனின் கவனத்தை பெற்றிருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கூலி திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். இப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தியிருந்தாலும், கலவையான விமர்சனத்தை பெற்றிருப்பது சற்று வருத்தத்தை அளிக்கிறது. படம் பார்த்த சிலர் முகம் சுழிக்கும் வகையிலான காட்சிகள் இருப்பதாகவும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்திற்கா இப்படி ஒரு ஹைப்பை ஏற்படுத்தி தந்தீர்கள் என்றும் கூறியுள்ளனர்.
கூலி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மார்வல் போன்ற படமாக இருக்கும் என்றும், காமிக் ஸ்டோரியில் பயணிக்கும் என்றும், சயின்ஸ் ஃபிக்சன் படம் என்றும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதற்கு காரணம் லோகேஷின் முந்தைய படங்களின் தாக்கம் தான் ரசிகர்களை இந்த அளவிற்கு சிந்திக்க வைத்திருக்கிறது. ஆனால், கதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே அனைவரது கருத்தாக இருக்கிறது. இது ஒரு வழக்கமான லோகேஷ் படமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் என்றும் சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக தமிழ் திரையுலகில் பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர்கள், பெரிய ஹீரோக்களின் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருவது பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக இந்தியன் 2, கங்குவா, வேட்டையன், ரெட்ரோ போன்ற பல படங்கள் படு தோல்வியை சந்தித்துள்ளன. தற்போது கூலி திரைப்படமும் அதன் வரிசையில் இடம்பிடித்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. சிறிய பட்ஜெட்டில் உருவாகும் சில படங்கள் 100 கோடி வசூலை அள்ளும் அளவிற்கு மக்களின் கவனத்தை பெற்று விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெறுகிறது. ஆனால், பெரிய ஹீரோக்களின் படங்கள் கவனத்தை பெறாதது எதனால் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
கூலி திரைப்படம் முன்பதிவில் வசூல் வேட்டையாடியது அனைவரும் அறிந்த ஒன்று தான். ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணமும் பக்கபலமாக அமைந்தது. ஆனாலும், கூலி திரைப்படம் கதையில் கோட்டை விட்டுவிட்டதாக வேதனை தெரிவிக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில், சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு மாதமாக சுட்டு வந்த 1,000 கோடி வடை மட்டுமே மிஞ்சியது என கிண்டல் செய்துள்ளார். அந்தளவிற்கு கூலி திரைப்படம் வெறுப்பை சம்பாதித்திருப்பது வேதனைக்குரிய விஷயம் தான். மீண்டும் பெரிய ஸ்டார் ஹீரோவான ரஜினியின் கூலி சறுக்கலை சந்தித்திருப்பது தமிழ் சினிமாவிற்கு வீழ்ச்சிதான்.





















