TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
TET Exam Date Change: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிகளை ஏற்கனவே அறிவித்த ஆசிரியர் தேர்வு வாரியம், தற்போது தேர்வு நடைபெறும் தேதியை மாற்றியுள்ளது. அதற்கான காரணம் என்ன.? பார்க்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் மாதம் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், அந்த தேதியை மாற்றி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய தேதி என்ன.? தேர்வு தேதி மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன.? இப்போது பார்க்கலாம்.
நவம்பர் 15, 16 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து புதிய அறிக்கையை வெளியிட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெறும் என முந்தைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது நிர்வாக காரணங்களால், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நவம்பர் 15-ம் தேதி(15.11.2025) அன்று தாள் I மற்றும், நவம்பர் 16-ம் தேதி(16.11.2025) அன்று தாள் II-ம் நடைபெறும் என திருத்திய அறிவிப்பில் வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு என்ன.?
இது குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு (2025) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள் - II) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை A (Website: http://www.trb.tn.gov.in) 11.08.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
மேலும், இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிரியர் தகுதி தேர்வு
அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
தேர்வு கட்டணம்
தேர்வர்களுக்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு 300 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இரண்டு தேர்வுக்கும் தனித்தனியாகத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை செலுத்தியபின், பதிவு செய்யப்பட்ட ஃபோன் நம்பருக்கு குறுந்தகவல் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 01.07.2025 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன், https://trb.tn.gov.in/admin/pdf/4796496415notific.pdf என்ற இணைப்பில் சென்று முழு தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.





















