Coolie Day 1 Collection: 100 கோடி ஜுஜுபி.. லியோ மட்டும் கஷ்டம் - ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு?
Coolie Day 1 Collection: ரஜினியின் கூலி திரைப்படம் அவரது 50 வருட கெரியரில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய முதல் நாள் வசூல் சாதனையை படைத்துள்ளது.

Coolie Day 1 Collection: ரஜினியின் கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல், லியோவைக் காட்டிலும் சற்றே குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியின் கூலி திரைப்பட முதல் நாள் வசூல்:
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி, பெரும் எதிர்பார்ப்புகளுடன் கூலி திரைப்படம் திரையரங்கில் நேற்று வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான படத்திற்கு முன்பதிவிலேயே பெரும் வரவேற்பு இருந்தது. அதன்படி, முதல் நாள் முடிவில் கூலி திரைப்படம் 61 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு போட்டியாக ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜுனியர் எண்டிஆர் நடிப்பில் வெளியான வார் 2 படம் சுமார் 45 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த சுதந்திர தின விழா வெளியீட்டில் கூலி திரைப்படம் முன்னிலை பெற்றுள்ளது.
50 வருடங்களில் இல்லாத சாதனை..
கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் என்பது, திரையுலகில் 50 வருட பயணத்தை முடிவு செய்துள்ள ரஜினிக்கு, முன் எப்போதும் கிடைக்காத பெரும் வரவேற்பாக அமைந்துள்ளது. முன்னதாக சுமார் 6 வருடங்களுக்கு முன்பு ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளியான 2.0 திரைப்படம், 60 கோடி ரூபாய் ஈட்டி இருந்ததே ரஜினி திரைப்படங்களில் மிகப்பெரிய முதல் நாள் வசூலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குட் பேட் அக்லியை பின்னுக்கு தள்ளி நடப்பாண்டில் தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாகவும் கூலி அமைந்துள்ளது. அதேநேரம், ஒட்டுமொத்தமாக முதல் நாளில் அதிக வசூல் தமிழ் சினிமா என்ற பட்டியலில் 66 கோடி ரூபாயுடன் விஜய் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ இன்னும் முதலிடத்தில் நீடிக்கிறது.
140 கோடியை அள்ளிய கூலி?
கூலி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே முதல் நாளில் சுமார் 28 முதல் 30 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. விடுமுறை அல்லாத நாளில் பதிவான மிகப்பெரிய வசூல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 16 முதல் 18 கோடியும், கர்நாடகாவில் 14 முதல் 18 கோடியும், கேரளாவில் சுமார் 10 கோடியும் வசூலனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற மாநிலங்களில் 7 முதல் 8 கோடியும் வசூலித்து ஒட்டுமொத்தமாக 61 முதல் 65 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேசா அளவில் மட்டும் 75 கோடி ரூபாய் வரை படம் ஈட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக கூலி திரைப்படம் முதல் நாளிலேயே சர்வதேச அளவில் 140 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஆரம்ப கட்ட தகவல்கள் மட்டுமே ஆகும். அதிகாரப்பூர்வ கணக்குகள் சற்றே ஏறக்குறைய இருக்கலாம். அதேநேரம், விஜயின் லியோ திரைப்படம் தனது முதல் நாளிலேயே சர்வதேச அளவில் 145 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.





















