மயிலாடுதுறையில் வெளியான கூலி திரைப்படம் - நெகிழவைத்த மாற்றுத்திறனாளி ரசிகர்...!
மயிலாடுதுறையில் கூலி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரஜினி ரசிகர்கள் கூலி திரைப்பட கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் , தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் கூலி. நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டாக தயாரித்துள்ளது. கூலி படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 14) -ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் இது 50-வது பொன்விழா படம் என்பதால், அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர்.
ஒரே நேரத்தில் மூன்று திரையரங்குகளில் கூலி திரைப்படம்
இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள மூன்று திரையரங்குகளிலும் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, ரஜினி ரசிகர் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

மக்களுக்கு உதவிகள் வழங்கிய ரசிகர்கள்
ரஜினிகாந்தின் ரசிகர்கள், தங்கள் தலைவரின் திரைப்படம் வெற்றிபெறவும், அவர் பூரண ஆயுளுடன் வாழவும் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து, திரையரங்கு வாசலில் ரஜினியின் ரசிகர்கள் கூலித் தொழிலாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என 50 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த உதவியில், புதிய ஆடைகள், சுவையான உணவுகள், மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை அடங்கியிருந்தன. ரஜினி ரசிகர்கள் வழங்கிய இந்த உதவியால், கூலித் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வெடித்த பட்டாசுகள், வழங்கப்பட்ட இனிப்புகள்
நலத்திட்ட உதவிகளுக்குப் பிறகு, ரசிகர்கள் திரையரங்கு வாசலில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஊர்வலமாகச் சென்று திரைப்படத்தைப் பார்க்க திரையரங்குக்குள் சென்றனர். ரஜினிகாந்தின் ரசிகர்களின் இந்த கொண்டாட்டம், மயிலாடுதுறை நகரில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

உணர்ச்சிப்பூர்வமான சம்பவம்
இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், அனைவரையும் நெகிழ வைத்த ஒரு சம்பவம் நடந்தது. இரண்டு கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளியான ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர், தரையில் தவழ்ந்தபடியே 'கூலி' படத்தின் முதல் காட்சியைக் காண திரையரங்குக்குள் வந்தார். அவரது இந்த செயல், ரஜினிகாந்த் மீது அவர் வைத்திருக்கும் ஆழ்ந்த அன்பையும், பற்றுதலையும் வெளிப்படுத்தியது. இந்தச் சம்பவத்தைக் கண்ட மற்ற ரஜினிகாந்த் ரசிகர்கள், கண்ணீர் மல்க அந்த ரசிகரை கட்டித்தழுவி, அவரை வரவேற்றனர்.

ரஜினிகாந்தின் திரைப்படங்கள் எப்போதும் அவரது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக, நலத்திட்ட உதவிகள் வழங்கியதும், மாற்றுத்திறனாளி ரசிகர் தவழ்ந்து வந்த சம்பவமும், ரஜினி ரசிகர்கள் மத்தியில் உள்ள அன்பையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகியுள்ள இந்த "கூலி" திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் குறிப்பாக எக்ஸ் தளத்தில், ரசிகர்கள் தங்கள் கொண்டாட்டங்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.






















