TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
தொடர் விடுமுறையை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள் வசூல் வேட்டை நடத்தும் நிலையில், அதிக கட்டணம் வசூலித்தால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.

பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மக்கள் படையெடுத்து வரும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“வாகனங்களை சிறைபிடித்து வரி வசூல் செய்வோம்“
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “நாளை சுதந்திர தினம் 15.08.2025 மற்றும் அரசு வார விடுமுறையைத் தொடர்ந்து, பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதை பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால், அதனை தடுக்க, தமிழ்நாட முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச் சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு, சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அதிகப்படியான கட்டணம் வசூல் செய்து மற்றும் அனுமதிக்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து, அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும், வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசூல் வேட்டையில் ஆம்னி பேருந்துகள்
முன்னதாக வெளியான தகவல்களின்படி, பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில், இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல், செயலிகள் மூலம் டிக்கெட் புக் செய்யும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
தொடர் விடுமுறை காரணமாக, தமிழக அரசு மற்றும் ரயில்வே துறை சார்பாக, சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் அதிக அளவில் மக்கள் புக்கிங் செய்ததால், முன்பதிவுகள் விற்றுத் தீர்ந்தன. இதைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல், தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். அதற்காக முன்பதிவு செய்வதற்காக முயன்றவர்களுக்குத் தான் அதிர்ச்சி காத்திருந்தது.
சரியான நேரத்தில், மக்களின் தேவையை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையை தொடங்கிவிட்டன. சாதாரணமாக, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல 600 முதல் 800 ருபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போதோ, 4000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதேபோல், திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில், டிக்கெட் கட்டணம் 2000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படுவதால், மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து, சேலம், நெல்லை, திருச்சி வழித்தடங்களுக்கு 3000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில், அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அது சரியான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் கட்டணக் கொள்ளையை தடுக்க முடியும்.





















