விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் விடுதலைப் போராட்ட வீரர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் வகையில் புதுமையான புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தென்குவளவேலி அரசுப் பள்ளியில் புதுமையான செயல்பாடாக விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி எடுத்து மாணவர்கள் மகிழ்ந்தனர்.
வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓவியக் கண்காட்சி தொடங்கியது. பள்ளியின் பள்ளியின் தலைமை ஆசிரியர் அ.வெற்றிவேலன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இது குறித்து பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியரும் கண்காட்சி ஏற்பாட்டாளருமான த. சூரியகுமார் கூறியதாவது:
நாடு முழுவதும் 79வது சுதந்திர தின விழா வருகிற வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் விடுதலைப் போராட்ட வீரர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் வகையில் புதுமையான புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மாணவர்கள் வரைந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் அடங்கிய ஓவியங்களின் செல்ஃபி பலகை முன்னால் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். புதன்கிழமை தொடங்கிய இந்தக் கண்காட்சி சுதந்திர தினம் வரை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

செல்ஃபி பலகை
பள்ளியில் நடைபெறும் விழாவிற்கு வருகை தரும் முக்கிய விருந்தினர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் செல்பி எடுத்துக் கொள்ளும் வகையில் செல்ஃபி பலகை வடிவமைக்கப் பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம், போராட்ட வலிமை ஆகியவற்றை புரிந்து கொள்ள இது போன்ற நிகழ்வுகள் உதவும்' என்றார்.
தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களை வரைந்த அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் விஜயகுமாரி, ரேணுகா, இளையராஜா, ராமமூர்த்தி, சுதா, இளநிலை உதவியாளர் சுவாமிநாதன், வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர்கள் புஷ்பா, சுபா, உட்பட பலர் கலந்து கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.






















