எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது #DravidianModel அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது- முதல்வர் ஸ்டாலின்

தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பணி நிரந்தரம், ஊதியக் குறைப்பு தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள், சென்னை, ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். 13 நாட்களாகப் போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், அமைச்சர்கள் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று (ஆக.13) நள்ளிரவில் தூய்மைப் பணியாளர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.
புதிய நலத்திட்டங்கள்
இதற்கு எதிர்க் கட்சிகளும் பொது மக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களுக்காக புதிய நலத்திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவு:
’’நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது #DravidianModel அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
என்னென்ன?
4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,
🍛 தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு
🎓 தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
💰 தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி
🏥 தூய்மைப் பணியாளர்களின் நல வாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
🏚 தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி
தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்
முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்!
இது என்றும் உங்களுடன், உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு!’’
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நேற்று அவர் ’கூலி’ படக் குழுவினரைச் சந்தித்துப் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.






















