கரூரில் இலவச வீடு கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளி; ஆட்சியர் அலட்சியமாக பேசுவதாக குற்றச்சாட்டு
மாற்றுத் திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகமான தான்தோன்றி மலைப் பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கி அதன் தொடர்ச்சியாக மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு வாரந்தோறும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உடனே தீர்வு கண்டு வரும் நிலையில்
முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பணியாற்றிய ஆட்சி காலத்தில் கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்தியேகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலின் இருக்கைகள் அமைத்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது வரை அந்த இருக்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு என பயன்படுத்தி வருகின்றது. இப்படிப்பட்ட நிலையில் தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கிய கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேட்டை சார்ந்த மாற்றுத் திறனாளியானபாபு. இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
மாற்றுத் திறனாளியான இவர் வேலைக்கு எதற்கும் செல்ல முடியாமல் இருக்கும் நிலையில் மனைவி வேலைக்கு சென்று வரும் வருமானத்தில், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிப்பறைக்கு சென்ற அவர் வழுக்கி விழுந்ததில் இடது கை முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தனக்கு என்று தனி வீடு வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொது மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வருகை தந்த அவர், ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தார். விடியல் வீடு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை எனக் கூறி அனுப்பி வைத்து விட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வராண்டாவில், ஆட்சியரின் காரின் முன்பு தனது மாற்றுத் திறனாளி வாகனத்தில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, அவரிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமரச பேச்சு நடத்தி ஆட்சியரை சந்திக்க அழைத்துச் சென்றனர். அப்போது, ஆட்சியர் ஒரு திட்டம் முடிவடைந்தால் அடுத்த திட்டம் வரும், வரும் திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வீல் சேரில் அழைத்து வரப்பட்ட அவர் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனத்தில் வீடு திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாபு, மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை, வீடு ஒதுக்கீடு செய்யப்படுவதாக பதில் மனு கொடுக்கிறார்கள், பிறகு அந்த திட்டம் தற்போது இல்லை என்கின்றனர். இது தொடர்பாக ஆட்சியரிடம் கேட்டால் அலட்சியமாக பதில் அளிக்கிறார். மாற்றுத் திறனாளிகள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.