Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Naam Tamilar Katchi: நாம் தமிழர் கட்சியில் இருந்து தொண்டர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் விலகி வந்த நிலையில் இன்று காளியம்மாள் விலகியிருப்பது சீமானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வளர்ந்து வரும் கட்சியாக உருவெடுத்து வருவது நாம் தமிழர் கட்சி ஆகும்.
சரியும் நாம் தமிழர் வாக்கு வங்கி:
ஆனால், அடுத்தாண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலுக்கு நிகரான வாக்குகளைப் பெறுமா? அல்லது கடந்த தேர்தலை விட அதிகரிக்குமா? என்ற கேள்விகளுக்கு நிகராக நாம் தமிழரின் வாக்கு வங்கி அதளபாதாளத்திற்குச் செல்லுமா? என்ற நிலை உருவாகியுள்ளது.
விஜய் மீது சீமான் அதிருப்தி:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு சீமான் - விஜய் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் விஜய் தமிழ் தேசியமும், திராவிடமும் தன்னுடைய இரு கண்கள் என்று கூறிய பிறகு விஜய்யை மிகக்கடுமையாக சீமான் விமர்சித்து வருகிறார்.
அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்:
இதன்பின்பு, நாம் தமிழர் கட்சியினருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையேயும் சமூக வலைதளத்தில் மோதல் போக்கு வெடித்தது. இதன்பின்னர், பலரும் நாம் தமிழரில் இருந்து விலகி தவெக-வில் இணைந்தனர். இதனுடன் பெரியார் குறித்து சீமான் தெரிவித்த கருத்து விஸ்வரூபம் எடுத்த நிலையில், நாம் தமிழரின் 52 மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திமுக-வில் இணைந்தனர்.
சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், சீமானின் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் அடுத்தடுத்து குற்றம் சாட்டிய பல நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது கடந்த சில மாதங்களாக நாம் தமிழரில் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், நாம் தமிழரின் முக்கிய முகமாக மக்கள் மத்தியில் பிரபலமான காளியம்மாள் நாம் தமிழரில் இருந்து விலகுவதாக வெளியான கருத்து இன்று உண்மையானது.
சீமானுக்கு டாட்டா சொன்ன காளியம்மாள்:
தன்னுடைய நாம் தமிழரின் பயணம் இன்றுடன் முடிவடைய உள்ளதாக காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், தமிழ் தேசியத்தின் வழியில் தன்னுடைய பயணம் தொடரும் என்று அவர் கூறியிருப்பதன் மூலமாக அவர் தமிழ் தேசியமும், திராவிடமும் தன்னுடைய இரு கண்கள் என்று கூறிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களில் மட்டும் சீமான் மீதான அதிருப்தி, விஜய் மீதான எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல காரணங்களால் நாம் தமிழரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் விலகியுள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், சாதாரண நிர்வாகி முதல் மகளிரணியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள் வரை விலகியிருப்பது நாம் தமிழர் தொண்டர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீறுகொண்டு வருவாரா சீமான்?
நாம் தமிழரில் இருந்து நிர்வாகிகள் விலகுவதை உடனடியாக நிறுத்தவும், கட்சியை மீண்டும் பலப்படுத்தவும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க சீமானுக்கு நிர்வாகிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதனால், இனி வரும் நாட்களில் கட்சியை வலுப்படுத்தும் விதமாக சீமான் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சட்டமன்ற தேர்தலுக்காக விரைவில் சுற்றுப்பயணத்தையும் சீமான் தொடங்குவார் என்று கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

