Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
Kaliammal: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ள காளியம்மாள் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kaliammal: தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தற்போது முதலே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியது.
தவெக-வில் இணையும் மாற்றுக்கட்சியினர்:
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய சில மாதங்கள் மந்தமாக செயல்பட்டாலும் கடந்தாண்டு இறுதியில் தவெக செயல்பாடுகள் சூடுபிடிக்கத் தொடங்கியது. குறிப்பாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நியமனம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. பிற கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தன்பக்கம் இழுக்க விஜய் வகுத்த வியூகத்தில் சிடிஆர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரும் இணைந்தனர்.
நாம் தமிழரில் விலகிய காளியம்மாள்:
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாளும் அப்போதே இணைவார் என்று தொடர்ந்து தகவல் வெளியானது. ஆனால், அவர் அப்போது இணையவில்லை. ஆனாலும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளருக்கு ஆதரவான பரப்புரையில் காளியம்மாள் ஈடுபடவில்லை. அப்போதே அவருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே விரிசல் இருப்பது வெளியானது.
அடுத்து எந்த கட்சி?
இந்த சூழலில், நாம் தமிழர் கட்சியில் இருந்து இன்று அதிகாரப்பூர்வமாக விலகினார். அவரது விலகல் கட்சியின் நிர்வாகிகள் பலருக்கும் எதிர்பார்த்ததாக இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
இந்த சூழலில், காளியம்மாள் அடுத்து எந்த கட்சியில் இணையப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. காளியம்மாள் நாம் தமிழர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள விலகல் கடிதத்தில் தமிழ் தேசியத்தை நோக்கி என் பயணம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பார்ககும்போது காளியம்மாள் தவெக-வில் இணைவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தவெக:
ஏனென்றால், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் தமிழ் தேசியமும், திராவிடமும் எனது இரு கண்கள் என்று விஜய் கூறியிருந்தார். இதன்பிறகே சீமான் விஜய்யை மிக கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். மேலும், நாம் தமிழர் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் சமூக வலைதளத்தில் மோதல் ஏற்பட்டது.
மேலும், பெரியார் மீதான சீமான் கருத்து பெரும் அதிர்வலையை தமிழக அரசியலில் ஏற்படுத்தியபோதும் காளியம்மாள் பெரியளவில் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா வரும் 26ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு முன்பாகவோ அல்லது இந்த விழாவிலோ நடிகர் விஜய் முன்பு காளியம்மாள் தவெக-வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காளியம்மாள் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்கள் பலரும் தவெகவில் இணைய வாய்ப்பு அதிகளவு உள்ளதாகவும் கூறப்படுகிறது. காளியம்மாள் நாம் தமிழர் கட்சி சார்பாக வட சென்னை மக்களவைத் தொகுதியிலும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
முக்கிய பதவி?
காளியம்மாள் ஒருவேளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தால் கட்சியின் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

