கரூர் அருகே சேவல் சண்டை....போலீசை பார்த்ததும் ஓட்டம் பிடித்த நபர்கள்..!
கரூர் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களின் 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே அனுமதி இன்றி சேவல் கட்டு ( சேவல் சண்டை) நடந்த தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு மாயனூர் போலீசார் சென்றனர். இதைக்கண்டு சேவல் சண்டை நடத்தியவர்கள், பங்கேற்றவர்கள் தப்பி ஓடினர். 10 பைக்குகளை (இருசக்கர வாகனங்கள்) மட்டும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா வீரியப்பட்டி முருகன் கோயில் பகுதி மற்றும் பிச்சம்பட்டி மாரியம்மன் கோயில் பக்கம் ஆகிய இரு பகுதிகளில் பணம் வைத்து சேவல் சண்டை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் மாயனூர் போலீஸார் இரண்டு பிரிவாக சேவல் சண்டை நடக்கும் இடத்திற்கு விரைந்தனர். மும்முரமாக நடந்து வந்த சேவல் சண்டையில் போலீசார் வந்ததை பார்த்தவர்கள் அனைவரும் கிடைத்த சேவல், பணத்தை எடுத்து கொண்டு வயல் வெளியாக ஒட்டம் பிடித்து தப்பித்துள்ளனர். போலீசாரும் களத்தில் இறங்கி பிடிக்க முயன்றும் பிடிக்கமுடியவில்லை. சேவல் சண்டைக்காரர்கள் விட்டு சென்ற 10 இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அனுமதி பெறாமல் சேவல் சண்டை நடத்திய நபர்கள் மற்றும் தப்பி ஓடிய வண்டியின் ரிஜிஸ்டர் நம்பரை வைத்து உரிமையாளர்களை பிடிக்க மாயனூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களின் 10 இருசக்கர வாகன பிடிப்பற்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.