அரசு வேலை கனவா? TNPSC Group 2 இலவச பயிற்சி வகுப்புகள்! வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
Group II முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 30.07.2025 (புதன்கிழமை) அன்று முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்.

விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள Group II முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
Group II முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒரு போட்டித் தேர்வு ஆகும். இந்தத் தேர்வு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (Combined Civil Services Examination-II) என்று அழைக்கப்படுகிறது. குரூப் 2 தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் பயின்ற மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசுத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள Combined Civil Services Examinations Group II முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 30.07.2025 (புதன்கிழமை) அன்று முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் 29.07.2025-க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எந்தெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது?
சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு, கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், திட்ட உதவியாளர், சிறப்பு உதவியாளர், சிறப்பு கிளை உதவியாளர், நன்னடத்தை அலுவலர், சிறைத் துறை ஆகிய பல்வேறு பதவிகள் நேர்காணல் அடிப்படையில் நிரப்படும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2A தேர்வுக்கான பதவிகள்
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
குரூப் 2 தேர்வுக்கான வயது வரம்பு என்ன?
குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 -க்குள் இருக்க வேண்டும். பட்ட படிப்பு படித்த பொதுப்பிரிவு அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.
குரூப் 2 தேர்வுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?
குரூப் 2 , 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட சில பதவிகளுக்கு விண்ணப்பிக்க தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவை முடித்திருக்க வேண்டும்.





















