ADMK EPS: “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
ஆளும் திமுக அரசுக்கு எதிராக, புதிய பாணியில் பிரசார திட்டங்களை அதிமுக கையிலெடுத்துள்ள நிலையில், புதுக்கோட்டையில் அதனை தொடங்கி வைத்தார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியன, பிரசாரங்களை முன்கூட்டியே தொடங்கி விட்டன. இந்நிலையில், தனது பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கிவிட்ட அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் புதிய பிரசார திட்டங்களை, புதுக்கோட்டையில் இன்று தொடங்கி வைத்தார். அந்த புதிய பிரசார திட்ட்ங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
“திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“
நேற்று முதல் புதுக்கோட்டையில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில், “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“ என்ற அதிமுகவின் புதிய பிரசார திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம், கடந்த தேர்தலின் போது, திமுக அளித்த வாக்குறுதிகளின் உண்மை நிலையை அறிய, மக்களுக்கு ரிப்போர்ட் கொடுக்கும் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்திய நிலையில், தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று, மக்களிடம் கொடுக்கப்பட உள்ள ரிப்போர்ட் கார்டையும் வெளியிட்டார்.
“பதில் சொல்லுங்க அப்பா“
இந்த நிகழ்வின்போது, “பதில் சொல்லுங்க அப்பா“ என்ற தலைப்பில், பெண்களின் பாதிப்புகள் குறித்த காணொலியையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
“திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது“
இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, 2026 தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது என குற்றம் சாட்டிய அவர், நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல என்றும் விமர்சித்தார்.
“கூட்டணிக்கு பெரிய கட்சிகள் வர வேண்டிய நேரத்தில் வரும்“
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வரவேண்டுமோ அப்போது வரும் என்று தெரிவித்தார். மேலும், கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.
அதோடு, பிரதமரின் வீட்டுக்கதவை அதிமுக தட்டுவதாக எழுந்த விமர்சனம் குறித்து பேசிய அவர், பிரதமரின் வீட்டுக்கதவை திமுகவினர் சென்று தட்டினால் மட்டும் சரியா என்று கேள்வி எழுப்பினார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டுவரும் எடப்பாடி பழனிசாமி, இந்த முறை புதிய அணுகுமுறையை கடைபிடித்து வருகிறார். கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றி விட்டதாக திமுக கூறிவரும் நிலையில், அதிமுகவின் இந்த ரிப்போர்ட் கார்டு எந்த அளவிற்கு அவர்களுக்கு கை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





















