Watch Video: ‘ஸ்டாலின் தாத்தாவ பாக்கணும்’ - குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர்..!
குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து நலம் விசாரித்தார். முதலமைச்சரிடம் குழந்தை பேசியதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி இமாலய சாதனை படைத்தது. கட்சியின் வெற்றியை கொண்டாட திமுகவினர் நேற்று அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். சில திமுக நிர்வாகிகள் தங்கள் குடும்பங்களுடன் வந்திருந்தனர்.
அப்போது ஒரு நிர்வாகி தனது குழந்தையுடன் நேற்று காலையிலேயே வந்திருந்தார். அப்போது, அண்ணா அறிவாலயத்தில் இருந்த அனுஷ்கா என்ற குழந்தை முதலமைச்சர் ஸ்டாலினை பார்க்க வேண்டும் என்று அங்கிருந்த ஒருவரிடம் கூறியது. அந்த குழந்தை தனது அழகான குரலில் தான் ஸ்டாலின் தாத்தாவை பார்க்க வேண்டும் என்று கூறியது. பின்னர், மாலை தனது அம்மா, அப்பாவுடன் அந்த குழந்தை முதலமைச்சரை சந்தித்தது. அப்போது, அவர் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து நலம் விசாரித்தார். முதலமைச்சரிடம் குழந்தை பேசியதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் 95%க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 21 மாநகராட்சிகளிலும் தொடர்ந்து பெருவாரியான வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி வருகிறது. திமுக கூட்டணி 95 சதவீதத்துக்கும் அதிகமான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றியது.
அதிமுகவின் கோட்டையாக விளங்கிய பல பகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பல இடங்களில் பட்டாசு வைத்து, இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 178 வார்டுகளையும், 2360 நகராட்சி வார்டுகளையும் , 4388 பேரூராட்சி வார்டுகளையும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
வெற்றிக்கு பின், சென்னை அண்ணா அறிவாலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அமைந்துள்ள மதசார்பற்ற கூட்டணிக்கு வெற்றி தந்ததற்கு தமிழ்நாடு மக்களுக்கு நன்றிகள். கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கி இருக்கும் நற்சான்று இந்த வெற்றி. இது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்திருக்கும் அங்கீகாரம். மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். இந்த வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. எனக்கு பொறுப்பு அதிகரித்திருக்கிறது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதுதான் கழகத்தின் லட்சியம், கழகத்தின் குறிக்கோள். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மக்களின் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்க வேண்டும். இதை தொடர்ந்து நான் கண்காணிப்பேன்” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்