"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
நாக்பூரில் அமைந்துள்ள பதஞ்சலி உணவு பூங்கா ஆரஞ்சு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள மிஹான் (நாக்பூரில் உள்ள மல்டி-மாடல் சர்வதேச சரக்கு மையம் மற்றும் விமான நிலையம்) பகுதியில் பதஞ்சலியின் 'மெகா உணவு மற்றும் மூலிகை பூங்கா' இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில், பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் கலந்து கொண்டார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 2016ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
பதஞ்சலி உணவு பூங்கா:
தொடக்க விழாவில் பேசிய நிதின் கட்கரி, "விதர்பா விவசாயிகளுக்கு புதிய உணவுப் பூங்கா தேவையான நிவாரணத்தைக் கொண்டுவரும். குறிப்பாக, வேளாண் நெருக்கடியால் ஏராளமான தற்கொலைகள் ஏற்பட்ட பகுதிகளுக்கு நிம்மதியை தரும்.
விதர்பா ஆரஞ்சுகளின் தரம் மற்றும் உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு சிறந்த விலையை உறுதி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியிலிருந்து ஆரஞ்சுகள் வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் அதே வேளையில், வங்கதேச அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 85 சதவிகித வரி, தளவாடச் செலவுகளை அதிகரிப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்துகிறது.
நான் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரிடம் பேசியபோது, நாம் வட்டி விகிதங்களைக் குறைத்தால், வரியைக் குறைக்க அவர் விருப்பம் தெரிவித்தார். தளவாடங்களை மேலும் மேம்படுத்த வார்தாவில் உலர் துறைமுகம் அமைக்கும் புதிய போக்குவரத்துத் திட்டம் அறிவிக்கப்படுகிறது.
"விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்"
இந்த வசதி மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியாவுக்கு நேரடி ஏற்றுமதியை செயல்படுத்தும். அங்கிருந்து வங்கதேசத்திற்கு பொருட்களை கொண்டு செல்ல முடியும். இதனால் உள்ளூர் விவசாயிகளுக்கான செலவுகள் குறையும்.
விதர்பாவில் விவசாயிகள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். விவசாயி தற்கொலைகள் நடக்கும் பகுதி என்ற துயரமான அடையாளத்தை இந்த உணவு பூங்கா மற்றும் பிற முயற்சிகள் மூலம் மாற்றி காட்டுவோம்" என்றார்.
பின்னர் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "புதிய உணவு பதப்படுத்தும் பிரிவு விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதன் மூலம் கணிசமாக பயனளிக்கும். இந்த உணவுப் பூங்கா ஆரஞ்சு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்" என்றார்.





















