சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த போக்சோ வழக்குகள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என 23 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் புகார்களின் பேரில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியில் உள்ள 23 பேரை பள்ளிக் கல்வித்துறை பணி நீக்கம் செய்துள்ளது. பாலியல் ரீதியான குற்றங்களைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து பல்வேறு பாலியல் புகார்கள் பெறப்பட்டன. இதில் பல்வேறு ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதை அடுத்து, 14417 என்ற எண்ணில் பாலியல் புகாரைத் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் 46 புகார்கள் பெறப்பட்டன. இவர்கள் மீது விசாரணை நடந்த நிலையில், 23 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத 23 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நிலுவையில் இருந்த வழக்குகள்
கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் என 238 பேர் கொண்ட பட்டியலைத் தயார் செய்து, அவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தி இருந்தார்.
குறிப்பாக, தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் 46 போக்சோ வழக்குகள் இறுதி விசாரணையில் இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். குற்றம் உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் எனவும் அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
முதல்கட்டமாக 23 பேர் பணி நீக்கம்
இதில் முதல்கட்டமாக 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த போக்சோ வழக்குகள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என 23 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.























