Tamil Nadu Class 12 Exams Cancelled : 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் இயங்காத நிலையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி நிலவியது.
பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்து கேட்புக்கு பிறகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர், முதல்வரிடம் அவர்களின் கருத்துக்கள், பரிந்துரைகளை விரிவாக கூறினார். இந்த நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் இருப்பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே செய் து, அதில் வெற்றியும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களின் கல்வியிலும், பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு, பொதுத்தேர்வுகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் கலந்து ஆலோசித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த தொற்று காரணமாக ஒன்றிய அரசு சி.பி.எஸ்.இ. வாரிய 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு நடக்கவிருந்த பொதுத்தேர்வை ஏற்கனவே ரத்து செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களும் இதே காரணத்திற்காக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளது.
இந்த பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து, கடந்த மூன்றுநாட்களாக பள்ளியளவில் தொடங்கி மாவட்டம் மற்றும் மாநில அளவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், பொது சுகாதார மற்றும் உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் தங்கள் கருத்துக்கள் கவனமுடன் கேட்டறியப்பட்டன.
பல்வேறு தரப்பினரும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆதரவாகவும், மறுத்தும் கருத்துக்களை தெரிவித்திருந்தாலும் அனைத்து தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.
தற்போதுள்ள விதிப்படி, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்ற நடைமுறை இருப்பதால், அவ்வயது குறைவான தடுப்பூசி போடாத மாணவர்களை ஒரே நேரத்தில் தேர்வு எழுதவரச் செய்வது, தொற்றினை அதிகரிக்கச் செய்யலாம் என்று வல்லுநர்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
பொதுத்தேர்வை மேலும் தள்ளி வைப்பது, மாணவர்களை மனதளவில் பாதிக்கும் என்பதால், பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவு செய்ய, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் உயர்கவித்துறை செயலாளர், சென்னை பல்கலைகழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்.
இக்குழு ஆய்வு செய்து மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் இக்குழுவின் அறிக்கை அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்படும். அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்.
பெருந்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய அளவில் நடத்தப்படும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளையும் ரத்துசெயயக் கோரி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மாநில கவ்வித் திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை எந்த பாதிப்பும் இல்லாமல் நடைபெறுவதை மாநில அரசு உறுதி செய்யும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.